சென்னையில் பிரபல குழுமத்தின் வணிக நிறுவனங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி வருவாய் மறைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
வருமானவரித் துறை அதிகாரிகள் சென்னையில் 2 குழுமங்களின் பிரபல வணி நிறுவனங்களில் டிசம்பர் 1ம் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனையில், கணக்கில் வராதா ரூ.10 கோடி ரொக்கமும் ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த பிரபல குழும நிறுவனம் ரூ.1000 கோடி வருவாய் மறைத்ததையும் வருமானவரித் துறை அம்பலப்படுத்தியுள்ளது.
இது குறித்து வருமானவரித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நகை கடை, ஜவுளி கடை, மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வரும் பிரபலமான 2 குழுமங்களில் டிசம்பர் 1ம் தேதி அன்று வருமான வரித்துறையினர் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த சோதனை நடவடிக்கை மொத்தம் 37 இடங்களில் நடைபெற்றது.
முதல் குழுமத்தைப் பொறுத்தவரை, இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற குற்றஞ்சாட்டக்கூடிய பொருட்கள், மூன்று கணக்குப் புத்தகங்களைக் கையாள்வதன் மூலம் முறையான விற்பனையை குறைத்துக் காட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. பல ஆண்டுகளாக விற்பனையை குறைத்துக் காட்டியதன் மூலம் ரூ. 1,000 கோடிக்கு மேல் வருவாயை மறைத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் ஜவுளிப் மற்றும் நகைப் கடைகளில் சுமார் ரூ.150 கோடி அளவுக்கு கணக்கில் வராத ரொக்கக் கொள்முதல் செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.
இரண்டாவது குழுமத்தைப் பொறுத்த அளவில், இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட பொருட்கள், இந்த குழுமம் ஒரு சில தரப்பினரிடமிருந்து 80 கோடி ரூபாய் அளவுக்கு போலி பில்களைப் பெற்று அதன் மூலம் வரி விதிக்கக்கூடிய வருமானத்தை குறைத்து காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. கணக்கில் வராத தங்கம் வாங்கியது தொடர்பான ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. தவிர, மதிப்பீட்டாளர் நகைகளின் மதிப்பை உயர்த்தியதில் பணம் செலுத்தியது கண்டறியப்பட்டது. மேலும், கணக்கில் காட்டப்படாத வாடகை ரசீதுகள் மற்றும் கணக்கில் வராத சில்லறை விற்பனை ரூ.7 கோடியாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
வருமானவரித் துறை இரு குழுமங்களிடமும் நடத்திய சோதனையில் ரூ.10 கோடி ரொக்கம் மற்றும் ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது” என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.