இன்று முதல் முழு ஊரடங்கு: சென்னையில் அனுமதிக்கப்பட்ட பணிகள் முழுப் பட்டியல்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற வேண்டும்.

By: Updated: June 19, 2020, 07:14:53 AM

கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 30-ம் தேதி வரையிலான 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

இந்த 12 நாள்  ஊரடங்கு காலங்களில் சில குறிப்பிட்ட அத்தியாவசிய பணிகள் கட்டுப்பாடுடன் அனுமதிக்கப்படும் என்று  தமிழக அரசு வெளியிட்ட  வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்தது.

அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள்: 

அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாகனம்:  பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரை ஊர்திகள் தவிர வேறு எவிதமான வாகனப் போக்குவரத்துக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும், தனியார் வாகனங்கள், ஆட்டோ, டாக்ஸிகள் உபயோகம் அனுமதிக்கப்படும்.

காய்கறி கடைகளுக்கு கட்டுப்பாடு:  நடமாடும் காய்கறி, மளிகைக்கடைகள், பழ விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும். பொதுமக்கள் தாங்கள் இருக்கும் பகுதிக்குள்ளேயே அத்தியாவசிய பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொது விநியோகக் கடைகள் இயங்காது. அந்த பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அரசு அறிவித்த நிவாரணங்கள் அக்கடைப் பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்.

வங்கி ஊழியர்கள் (இ-பாஸ் உண்டு ):  ஜூன் 29 ஆம் தேதி மற்றும் ஜூன் 30 ஆகிய நாட்களில் மட்டும் வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு செயல்பட அனுமதிக்கப்படும். ஏடிஎம், அது சம்மந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.

மத்திய அரசு ஊழியர்கள் (இ-பாஸ் உண்டு ):  33 % பணியாளர்கள் மிகாமல் மத்திய அரசு அலுவலகம் இயங்க அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள், தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும்.

மாநில அரசு ஊழியர்கள் (இ-பாஸ் உண்டு ):  33 % பணியாளர்களுடன் மாநில அரசுத் துறைகள் செயல்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், காவல், வருவாய் & பேரிடர் மேலாண்மை, மின்சாரம், ஆவின், உள்ளாட்சிகள், தொழிலாளர் நலன், கூட்டுறவு, உணவு & நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவை தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற வேண்டும்.

 

விமானப் பயணியர்  (விமான டிக்கெட் இ-பாஸாக செயல்படும் ):  சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் ஜூன் 19 – 30ம் தேதி வரையிலான ஊரடங்கு காலத்தில் சென்னை விமான நிலையம் தற்போதுள்ள விதிமுறைகள்படி, தடையில்லாமல் தொடர்ந்து செயல்படும்  என்று தெரிவிக்கப்பட்டது. விமானம் மற்றும் ரயில் பயணியர் தங்கள் பயணச் சீட்டுகளை வைத்திருக்க வேண்டும். வாகன சோதனையின் போது போக்குவரத்துக் காவல்துறையினருக்குத் தெளிவாகத் தெரியும்படி காட்டுதல் வேண்டும்.

உணவகங்கள்: காலை 6 மணி – இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் ஊழியர்கள் தங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து உரிய அடையாள அட்டைகளைப் பெற்று வாகனங்களில் செல்லுதல் வேண்டும்.

முதியோர் இல்லங்கள் (இ-பாஸ் உண்டு ):  முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர் / நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

ஊடகத்துறை:   அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டது .

கட்டுமானப் பணி:  இந்த முழு ஊரடங்கு நாட்களில் பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணி இயங்க அனுமதி அளிக்கப்படும்  .

தொழிலாளர்கள்:  சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு முறை RT-PCR பரிசோதனை செய்து, தொழிற்சாலை வளாகத்திலேயோ அல்லது அதன் அருகிலேயோ தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படுவர். இவர்கள் தினமும் சென்று வர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கல்யாணம்/மருத்துவம்/ இறப்பு:  சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே
இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.

மேலும், சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், ” அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே அதாவது 2 கி.மீ தொலைவிற்குள் மட்டும் நடந்த சென்று பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.

முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆத்ரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கி இருக்கும் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவி புரிவோர் மற்றும் அரசு, தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும் வாகன அனுமதி வழங்கப்படும்.

பொதுமக்கள் பிற இடங்களுக்கு வாகனங்களில் செல்வது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. இந்த 12 நாள் ஊரடங்கு காலத்தில் சரக்கு வாகனங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் தங்கள் நிறுவனத்திடமிருந்து உரிய அடையாள அட்டை, அனுமதி சீட்டு மற்றும் உரிய ஆவணங்களைப் பெற்று வாகனங்களை செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஜூன் 21, 28 ஆகிய தேதிகளில் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதால், பால் விநியோகம், மருத்துவமனை, மருந்துக் கடைகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் வாகன அனுமதி கிடையாது” என்று தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai complete lockdown starts what allowed what not allowed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X