சென்னையில், மதுரவாயல் - வானகரம் சாலையில், விபத்தை தடுக்க முடியாததால் மனமுடைந்த போக்குவரத்து காவலர், சாலையில் பூசணிக்காயை உடைத்து திரிஷ்டி கழித்தார்.
Advertisment
ஒரு திருநங்கையின் உதவியுடன், வெள்ளிக்கிழமை காலையில் விபத்து இல்லாத பகுதிக்காக காவலர் பிரார்த்தனை செய்த நிகழ்வு, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் இடையே கடந்த ஆறு ஆண்டுகளில் 120 விபத்துகள் நடந்துள்ளன.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் பூந்தமல்லி-ஸ்ரீபெரும்புதூர் வழித்தடத்தை விரிவுபடுத்துவதில் தாமதம் உள்ளதால் அதுவும் உதவவில்லை. 23 கி.மீ., நீளமுள்ள இந்த ஆறுவழிச்சாலை கடந்த மே மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட இருந்தது.
இந்நிலையில், மதுரவாயல் போக்குவரத்து அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பழனி, உயிரிழப்பு மற்றும் உயிரிழப்பில்லாத விபத்துகளுக்கான ஹாட்ஸ்பாட்களின் பட்டியலைத் தொகுத்தார்.
பிறகு, ஒரு திருநங்கையை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று, அதிக விபத்து நிகழும் பகுதிகளில், பூசணிக்காய் மற்றும் எலுமிச்சை பழத்தை உடைத்து திரிஷ்டி கழித்தார்.
ஆனால், உடைத்த பூசணிக்காயை சாலையில் இருந்து அகற்றாததால், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது.
சாலைகளில் பூசணிக்காய்களை உடைப்பது விபத்துகளை ஏற்படுத்தும் என்பதால், இந்த செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கபில் குமார் சி சரத்கர் கூறுகையில், இது அதிகாரியின் தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் இது தவிர்க்கப்பட வேண்டிய செயல். அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை வேறுபடுத்தி பார்க்க தவறிவிட்டார்.
விபத்துக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய பகுத்தறிவு மற்றும் அறிவியல் ஆய்வுகளை மட்டுமே சென்னை போக்குவரத்து காவல்துறை நம்புகிறது, என்று கூறினார்.
இதனிடையே, சாலையில் பூசணிக்காய் உடைத்த எஸ்ஐ பழனி, பணியில் இருந்து விலக்கப்பட்டு இப்போது கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“