siddha treatment covid 19 : சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதலாக சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வந்தாலும் நோய்த்தொற்று வேகமாக பரவக் கூடிய காரணியாக உள்ளது. இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவ சிகிச்சை முறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னையில், கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவ மையங்கள் இயக்கி வருகின்றன.அந்த வகையில் தற்போது ஜவகர் பொறியியல் கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி மற்றும் அம்பேத்கர் கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 539 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டில் கொரோனா தடுப்பு மருந்து: நிபுணர்கள் சொல்வது என்ன?
இந்நிலையில், ஜவகர் பொறியியல் கல்லூரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாச்ஜ் சென்னையில் கொரோனா சிகிச்சையில் கூடுதலாக சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவம் நல்ல பலன் அளித்துள்ளது. இன்று 30 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை 539 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவர்கள் அனைவரும் அறிகுறியுடன் இருந்த கொரோனா நோயாளிகள் ஆவார்கள்.
இவர்களில் ஒருவர் 90 வயதானவர் ஆவார். இதைத் தவிர 80 வயதுக்கு மேற்பட்ட மூவர் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட 11 பேர் முழு குணம் அடைந்துள்ளனர். இந்த சிகிச்சை மையங்களை அலோபதி மருத்துவர்களும் மேற்பார்வை செய்து வருகின்றனர். தற்போது மூன்று இடங்களில் இந்த சித்த மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
இது போல் கோரோனா சித்த மருத்துவ மையங்கள் விரைவில் மேலும் 2 அல்லது மூன்று அதிகரிக்கப்பட உள்ளன. இவற்றில் ஒன்று அரசு மருத்துவக் கல்லூரியில் இணைக்கப்படும் 600 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையமாக இருக்கும். இது குறித்து சுகாதாரத் துறையுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
அதே போல், கொரோனா சிகிச்சையில், சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil