சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகள் முதல்வர் பழனிசாமியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து டாக்டர்கள் மேற்கொள்ள இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் தினமும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் போதிய சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
ஆனால், கொரோனா தொற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள போதுமான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகள் இல்லையென்றும், தாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 22ம் தேதி மாலை 3 மணி முதல் கொரோனா தடுப்பு பணிகளை புறக்கணிக்க உள்ளதாக டாக்டர்கள் அறிவித்திருந்தனர்.
மருத்துவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளில், மதுரை அரசு மருத்துவமனை பின்பற்றி வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அங்கு பணிபுரியும் டாக்டர்கள் தங்க சிறந்த ஓட்டல்கள் மற்றும் ஹாஸ்டல்களில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன் RT-PCR சோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் கொரோனா நெகட்டிவ் என்று முடிவு வந்தபின்னரே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்திற்கும் தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் கே செந்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களது போராட்ட அறிவிப்பு தொடர்பாக, மருத்துவமனை டீன் உடன் முதல்வர் பழனிசாமி, வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, நோய் தொற்றுக்கு உள்ளாகி இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு பணியும் வழங்கப்படும். தல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். எதிர்பாராத விதமாக இறப்பு ஏற்பட்டால், அவர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இறந்தவர்களின் உடலை, பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும், அடக்கம் செய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.அவர்கள் பணியை பாராட்டி, அவர்களுக்கு உரிய விருதுகளும், பாராட்டு சான்றுகளும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil