கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமானநிலையத்தில் கிட்டத்தட்ட 100 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் பகுதியில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, இன்று ஒட்டுமொத்த உலகத்தையே கதிகலங்கவைத்துள்ளது. சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக துவக்கி செயல்படுத்தியதன் விளைவாக அங்கு வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு பலியாகியுள்ளனர். துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் இதன் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.
வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக, விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமானநிலையத்தில், கடந்த 40 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 100 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 37 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிப்ரவரி மாதத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பட்டியலில், 9 இண்டிகோ விமானங்கள், 5 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள், 2 பாடிக் ஏர்லைன்ஸ் விமானங்கள், 2 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள், 3 லுப்தான்சா மற்றும் 14 கேதே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானங்கள் அடங்கும்.
மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை 62 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
6 குவைத் ஏர்லைன்ஸ் விமானங்கள்
6 தாய் ஏர்லைன்ஸ் விமானங்கள்
4 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்
29 இண்டிகோ விமானங்கள்
17 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
113 பில்லியன் டாலர்கள் இழப்பு : சர்வதேச விமான போக்குவரத்து கழகம் (IATA) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விமானங்களின் சேவைகள் ரத்து உள்ளிட்ட காரணங்களால் மார்ச் 5 வரையிலான காலகட்டத்தில் 113 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளியேற ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் போராடி வருகின்றன. விமான சேவை என்பது தற்போதைய நிலையில் அத்தியாவசிய ஒன்றாகும். பல்வேறு நாடுகளின் அரசுகள் இணைந்து செயல்பட்டு இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காண முன்வர வேண்டும் என IATA நிர்வாக இயக்குனர் அலெக்சாண்ட்ரே டி ஜூனியாக் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தின் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.