chennai corona virus : தொடர் கண்காணிப்பு, துரித நடவடிக்கை, தொற்றை விரைவில் கண்டறிதல் காரணமாக சென்னையில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக் கட்டுக்குள் வருவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொற்றை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது பரவலை கட்டுப்படுத்த முழுமையாக வழிவகுக்கிறது. வீட்டுக்கே சென்று கொரோனா சோதனை, நடமாடும் கொரோனா டெஸ்டிங் ஸ்கார்டு ஆகியவை சென்னையில் துரிதமாக செயல்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகும்.
”சென்னையின் முக்கிய பகுதிகளான ராயபுரம், தண்டையார்பேட்டையில் முன்பு நாள் ஒன்றுக்கு 200 கொரோனா கேஸ்கள் கண்டறியப்படும். ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 50- 80 கேஸ்கள் மட்டுமே உறுதி செய்யப்படுகின்றன. காரணம், சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அறிகுறிகள் இருந்தாலே அவர்களை வீட்டில் தனிமைப்படுத்துகிறோம். வீட்டில் வாசலில் ஸ்டிக்கர் ஒட்டிவிடுவோம்.
அவர்களின் கொரோனா டெஸ்ட்டுக்கான முடிவுகளை பார்த்து பாஸ்டிவ் அல்லது நெகடிவ் பொருத்து ஒடப்பட்ட ஸ்டிக்கர்களை கிழித்து விடுவோம். இதன் மூலம் மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க முடியும். மேலும் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த அனைவரையும் தொடர்ந்து தனிமைப்படுத்தி கண்காணிப்போம்” என்று சென்னை மாநகராட்சியில் கொரோனா களப்பணியில் பணியாற்றும் மூத்த அதிகாரி விளக்கியுள்ளார்.
சென்னையில் ஜூலை 20 ஆம் தேதி நிலவரப்படி, 87,235 கொரோனா கேஸ்கள் உள்ளன. இது தமிழகத்தில் உள்ள கொரோனா கேஸ்களில் 50 சதவீதம் ஆகும். மாநகராட்சியின் கீழ் 15 மண்டலங்கள் உள்ளன. அதில், ராயபுரம் (மண்டலம் 5), அண்ணா நகர் (மண்டலம் 8), தேனம்பேட்டை (மண்டலம் 9), தொண்டியார்பேட்டை (மண்டலம் 4), கோடம்பாக்கம் (மண்டலம் 10) ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.
சென்னை மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, ராயபுரத்தில் 10,240, அண்ணா நகரில் 9,745, கோடம்பாக்கத்தில் 9,727, தேனாம்பேட்டையில் 9,421, மற்றும் தண்டையார் பேட்டையில் 8,750 கொரோனா கேஸ்கள் உள்ளன. இதில் கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதே போல், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் எண்ணிக்கையும் 81 சதவீதம் அதிகரித்துள்ளது.
ராயபுரத்தில், 2,116 காய்ச்சல், சளி தொடர்பாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன, மொத்தம் 91,407 பேர் கலந்து கொண்டனர், இதன் மூலம் 9,456 அறிகுறி கொண்ட கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டன. மண்டலத்தில் புதிய வழக்குகளின் எண்ணிக்கையில் (-3.2 சதவீதம்) குறைவு ஏற்பட்டுள்ளது. இதேபோல், கோடம்பாக்கத்தில் (- 4.0 சதவீதம்), தேனாம்பேட்டை (- 2.8 சதவீதம்), தண்டையார்பேட்டை (- 1.9 சதவீதம்), இதன் மூலம் புதிய கொரோனா கேஸ்கள் குறைந்து வருவது தெரிகிறது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மே 8 முதல் ஜூலை 20 வரை மொத்தம் 20,071 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 12,22,931 பேர் கலந்து கொண்டுள்ளனர், அதில் 65,159 பேர் அறிகுறி கொண்டவர்களாக இருந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
”பாதிகப்பட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தல் கொரோனா கேஸ்களை குறைக்க வழி செய்கிறது சென்னையில் சுமார் 4,000 தன்னார்வலர்கள் கொரோனா களப்பணியில் பணியாற்றுக்கின்றனர். தனிமைப்படுத்தப்பட குடும்பங்கள்,அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் நேரடியாக கண்காணிப்பு வளையத்திற்குள் வருகின்றன. அவர்களின் வீட்டு வாசலில் மாநகராட்சி ஊழியர்கள் அல்லது தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அவர்களுக்கு அவசர தேவை என்றால் ஏதாவது அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் ஊழியர்கள் அவர்களுக்காக பணிப்புரிவார்கள். அவர்கள் வெளியில் செல்வது முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. ” என்கிறார் மாநகராட்சி அதிகாரி ஒருவர்.
”இந்த மாத தொடக்கதில் சென்னையில் சந்தைகள் திறக்கப்படுவது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. அதிலும் கோயம்பேடு போன்ற சந்தைகள் தான் அதிகளவு கொரோனா பரவலை வழிவகுக்கிறது. பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டமாக செல்வதை தவிர்த்தாலே போதும். காசிமேடு மீன் மார்க்கெட்டில் அதிகளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை அதிகாரிகள் கேள்விப்பட்டனர். உடனே , அங்கு விரைந்து காசிமேடு சந்தை பிரதிநிதிகளை சந்தித்து சமூக இடைவெளி பின்பற்றாவிட்டால் சீல்வைக்கப்படும் என எச்சரித்தனர” என்றும் தெரிவித்தார்.
கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு இதுவரை 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ், மார்ச் மாதத்தில் பரவிய கொரோனா தொற்றில் இருந்து சென்னை படிப்படியாக மீண்டு வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “முன்பு நாள் ஒன்றுக்கு 4,500 பேர் பணியில் ஈடுப்பட்டு வந்தனர். இப்போது 12,000 நபர்கள் கொரோனா களப்பணியில் பணிப்புரிந்து வருகின்றனர். சென்னையில் இதுவரை ஐந்து லட்சம் பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமான சோதனை சென்னையில் தான் நடத்தப்பட்டுள்ளது.
முன்பு 100 பேருக்கு சோதனைகளை நடத்தினால் உறுதிப்படுத்தப்படும் கேஸ்கள் 35-37 சதவீதமாக இருக்கும், இப்போது அது 10 – 12 சதவீதமாகக் குறைந்துள்ளது. வீடு வீடாக கண்காணிப்பு நடத்துவதற்கும் கோவிட் -19 அறிகுறிகளைக் கொண்ட நபர்களை அடையாளம் காண்பதற்கும் 12,000 தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கோவிட் -19 நேர்மறை நோயாளிகளுக்கு தேவையான சேவைகளை வழங்க 300 மருத்துவர்கள் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil