/indian-express-tamil/media/media_files/2025/03/19/TCY7SljPDCXUQ5SccaXB.jpg)
சென்னை மாநகராட்சியின் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மாநகராட்சி மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம்.
செய்தித்தாள் வாசிப்புப் பழக்கம்:
சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு செய்தித் தாள் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவித்து அதனடிப்படையில் குறிப்புகள் தயார் செய்யவும், வினாடி வினாப் போட்டிகள் நடத்திடவும், அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரால், தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து வினாத்தாள்கள் தயாரித்து, தேர்வுகள் நடத்தப்படும்.
அவற்றில், வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மற்றும் மண்டலம் அளவிலான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இதனை மேற்கொள்ளும் வகையில் பள்ளி ஒன்றுக்கு ரூ.15,000/- முதல் ரூ.75,000/-வரை 211 பள்ளிகளுக்கு ரூ.86.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
வளமிகு ஆசிரியர் குழு அமைத்தல்:
சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு, மண்டலம் வாரியாக "வளமிகு ஆசிரியர் குழு" (Pooling of Resource Teachers) அமைக்கப்படும்.
மேலும் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களைத் தேர்வு செய்து, அவர்கள் தடகளம் மற்றும் குழுப்போட்டிகளில் மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500/- வீதம் மொத்தம் 62.55 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
மகளிருக்கு சுய வேலை வாய்ப்பு:
மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், இதற்கென உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, (Standard Operating Procedure) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் (Tally) இலவசமாக வழங்கிட, ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மையம் அமைத்திட, மண்டலம் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் வீதம் 15 மண்டலங்களுக்கு ரூ.7.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெண்கள் மற்றும் முதியோர் நலன்:
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நகர்ப்புற சுகாதார மற்றும் நல மையங்கள், 16 சமுதாய நல மையங்கள், 1 தொற்று நோய் மருத்துவமனை, 2 பகுப்பாய்வு மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் புளியந்தோப்பில் உள்ள 1 காச நோய் மருத்துவமனை ஆக மொத்தம் 303 சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் தாய் சேய் நல சேவைகள், தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை வசதிகள், தடுப்பூசி சேவைகள், அவசரகால சேவைகள் மற்றும் ஆய்வக சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது மூட்டு வலி, எலும்பு, தசை சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் மனநலம் சார்ந்த நோய்களுக்கான சிகிச்சை பெற வரும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆகவே, முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதியோர் நலப் பிரிவுகள் தொடங்குவது அவசியமாகிறது.
வெறிநாய்க்கடி தடுப்பூசி:
பெருநகர சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்கவும் நாய் இனக்கட்டுபாட்டு விதிகள் 2023-க்குட்பட்டு தெருக்களில் பிடிக்கப்படும் நாய்களுக்கு இனக்கட்டுபாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி சென்னையில் சுமார் 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. வெறிநாய்க்கடி நோயைத்
தடுக்கும் பொருட்டு அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடி தடுப்பூசி போடுவது அவசியமாகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் ரூ.3 கோடி செலவில் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்படும்.
தகவல் தொழில்நுட்பம்:
பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகளை செய்யும் அலுவலர்கள் செயல்திறன் மிக்க வகையில் செயல்படவும், பொது மக்களுக்கு பல்வேறு சேவைகளை விரைவாகவும், எளிதாக அணுகக்கூடிய வகையிலும் வழங்குவதில் மாநகராட்சி பல முக்கியமான சவால்களை எதிர்கொள்கின்றது. தற்போது இணையதளங்கள் மற்றும் பயன்பாட்டில் மொபைல் உள்ள செயலிகளை பயன்படுத்துவோர் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். உலகளவில் மிகப் பெரிய பயனர் அடிப்படையைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் (WhatsApp) பயன்பாட்டு தளத்தைப் பயன்படுத்தி, இந்த இடைவெளியை நிரப்புவதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி, ஒரு நவீன மற்றும் திறன்வாய்ந்த சேவைகளை செயல்படுத்தி அதற்கான தீர்வை வழங்க முடியும்.
பாதுகாப்பான வாகன நிறுத்துமிடம்:
சென்னை வளர்ந்து வரும் மாநகரமாக உயர்ந்துள்ளது. மிகை அளவிலான வணிக நிறுவனங்கள், கடைகள் பெருகிவருவதால், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பேருந்து வழித்தடங்கள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும், பாதசாரிகளுக்கு நடந்து செல்வதில் சிரமமும், பாதுகாப்பின்மையும் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க சாலையோரங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் வாகன நிறுத்துமிடத்தை (Smart Parking) கண்டறிவதற்கு செயலி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதனை பொது மற்றும் தனியார் பங்குதாரர்கள் (Public Private Partnership) முறையில் செயல்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான வாகன நிறுத்துமிடத்தை அறிந்து கொள்ளவும், முன்பதிவு செய்துஉபேயோகப்படுத்தவும் இயலும். இதனால் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும். பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறந்த வாகனப் போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership) முறையில் அமைக்கப்படும். இதனால், வாகன நெரிசல்கள் குறைவதுடன் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தப்படும்.
புதிதாக QR Code வசதி:
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு, பொதுமக்கள் எளிய வழியில் வரி செலுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், தற்போது கூடுதலாக QR Code வசதி ஏற்படுத்தித் தருதல். சொத்து வரி மதிப்பீடு, பெயர் மாற்றம் திருத்தத்திற்கான இறுதி ஆணை அறிவிப்பு, புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள், தொழில் வரி வழங்கும் அறிவிப்புகளுக்கு புதிதாக QR Code வசதி ஏற்படுத்தப்படும். இதனால், எவ்வித சிரமும் இன்றி உடனடியாக வரிகளை செலுத்த இயலும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.