கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகளை உடையவர்கள் அவர்களாகவே மருந்துகளை எடுத்துக் கொள்ளும் செய்திகள் அதிக அளவில் வெளியானதை அடுத்து, சென்னையில் உள்ள அனைத்து மருந்தகங்களும், பாராசிட்டமால் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை வாங்குவோர்களைப் பற்றிய விவரங்களை மாநகராட்சிக்கு அனுப்புமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மற்றும் அதன் அறிகுறிகளுக்கு சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி மருந்து வாங்குபவர்களின் விவரங்களை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழங்க மருந்தகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளை தனிமைப்படுத்தவும், தேவைப்பட்டால் அவர்களை கொரோனா சிகிச்சை மையங்களில் சேர்க்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், விவரங்களை அனுப்பத் தவறும் மருந்தகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மருந்து வாங்கிய நாளில் வாங்கியவரின் தொலைபேசி எண் மற்றும் பெயர் மருந்தகத்தால் மாநகராட்சிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் அத்தகைய குடியிருப்பாளர்களை தொலைபேசியில் அழைத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். மேலும், மருத்துவ குழுக்களை பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு அனுப்பி சோதனை செய்வார்கள் என்று கூறினார்.
கொரோனா நோயாளிகளுக்கு ஆரம்ப கட்டத்தில் சிகிச்சையளிக்க அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது, நகரின் 15 மண்டலங்களில் 17,226 கொரோனா நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர். கொரோனா சிகிச்சை மையங்களில் 1,114 படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில், 7,453 படுக்கைகள் காலியாக உள்ளன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
மாநகராட்சி அதிகாரிகள் வீட்டு தனிமையில் உள்ள நோயாளிகளுடன் தொலைப்பேசி மூலம் கவுன்சிலிங்கை நடத்துவார்கள். இதன் மூலம் ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அந்த நோயாளிகளை கொரோனா சிகிச்சை மையங்கள் அல்லது பிற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
சென்னையில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில், வீட்டில் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க தொற்று பாதித்த ஒவ்வொருவரையும் ஆய்வு செய்யுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையிலான அதிகாரிகள் வளசரவாக்கம், நெற்குன்றம் மற்றும் ராமபுரம் போன்ற பகுதிகளில் தொற்றுநோய்களின் போது ஒவ்வொரு முறையும் வீட்டிலேயே ஏற்படும் இறப்புகளைப் பகுப்பாய்வு செய்துள்ளனர், மேலும் இதுபோன்ற மரணங்களைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், சனிக்கிழமை, சென்னை மாநகராட்சி 447 காய்ச்சல் முகாம்களை நடத்தியது, இதில் 26,298 பேருக்கு காய்ச்சல் சோதனை செய்யப்பட்டது. அவர்களில் 1,162 பேர் கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையில் சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. வெள்ளிக்கிழமை 34,094 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
சென்னையில் இதுவரை, மொத்தம் 20.87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் டோஸை 15.5 லட்சம் பேர் பெற்றுள்ள நிலையில், 5.8 லட்சம் பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil