சென்னை மாநகராட்சியின் வாகனங்களை ஓட்டுநர்கள் முறையாக இயக்குவதில்லை என்று புகார்கள் எழுந்த நிலையில், மாநகராட்சி வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தி கண்காணிக்க அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் 10 மண்டலங்களில் தனியார் நிறுவனங்களும் 5 மண்டலங்களில் மாநகாட்சி நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றன. குப்பை சேகரிக்கும் பணியில் தனியார் வசம் 2,287 வாகனங்கள் உள்ளன. சென்னை மாநகராட்சி வசம் குப்பை சேகரிக்கும் பணிகளுக்காக மட்டுமல்லாமல் பல்வேறு பணிகளுக்காக 2,886 வாகனங்கள் உள்ளன.
லாரிகள், பேட்டரி வாகனங்கள், பொக்லைன், பாப்கார்டு, மாடுகள் மற்றும் நாய்களைப் பிடிக்கும் வாகனங்களை இயக்குவதற்கு 400-க்கும் மேற்பட்ட நிரந்தர ஓட்டுநர்களும் ஒப்பந்த அடிப்படையிலும் ஓட்டுநர்கள் பணியாற்றுகின்றன.
இந்நிலையில், அதிகாரிகளின் வாகனங்களைத் தவிர, இதர வாகனங்கள் களத்தில் பணி செய்வதில்லை என்று தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை மாநகராட்சியில் பணியில் இருக்கக்கூடிய சில ஓட்டுநர்கள், பணியில் இருப்பதாக கையெழுத்துபோட்டுவிட்டு சொந்த வேலைகளுக்காக சென்றுவிடுவதாகவும் அவர்கள் இயக்க வேண்டிய, பொக்லைன் மற்றும் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுக் கிடப்பதால், தூர்வாரும் பணிகள், கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றுவது, நாய் பிடிக்கும் வண்டிகளை இயக்குவதில் அதிக அளவு தொய்வு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் வாகனங்களை ஓட்டுநர்கள் முறையாக இயக்குவதில்லை என்று புகார்கள் எழுந்த நிலையில், சென்னை மாநகராட்சி வாகனங்களை முறையாக இயக்கிக் கண்காணிக்க அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்துவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“