சென்னை பெருநகர மாநகராட்சியில் 200 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 196 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் மீது தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசதிகள் செய்து தருவதில்லை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பள்ளிகள், அம்மா உணவகம் போன்ற இடங்களில் ஆய்வு செய்வதில்லை என்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன.
குறிப்பாக, விரிவாக்கப்பட்ட மண்டலங்களான சோழிங்கநல்லூர், பெருங்குடி, ஆலந்தூர், மாதவரம் ஆகியவற்றில் பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கும், வீடுகள் கட்டுவதற்கும் கவுன்சிலர்கள் அரசு நிர்ணயித்த பணத்தை விட கூடுதலாக பணம் கேட்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.
ரூ.30 லட்சத்தில் வீடு கட்டினால், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற ரூ.5 லட்சத்துக்கு மேல் கமிஷன் கேட்பதாகவும் கூறப்படுகிறது. குடிநீர் இணைப்பு பெற சுமார் ரூ.23,000 செலுத்த வேண்டும். அதையும் 10 தவணைகளில் செலுத்த அரசு வழிவகை செய்துள்ளது. ஆனால் கவுன்சிலர்கள் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிந்த பின்னர், கடந்த ஜூன் மாதம் மாநகராட்சியில் உள்ள அனைத்து கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின், காவல்துறை நுண்ணறிவுப் பிரிவிடம் அறிக்கை கேட்டதாக தெரிகிறது.
அதன்படி, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும் இதனால் மக்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது
இதையடுத்து சென்னை மாநகராட்சியில் உள்ள 4 கவுன்சிலர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலரே நேரடியாக, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்பபட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றவர்களில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“