சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் மாதவி மணலி பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயராக பிரியா உள்ளார். இவர் பொறுப்பேற்ற பின், சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக மாதவி என்பவர் நியமிக்கப்பட்டார். மேயரின் டபேதார் என்ற முறையில் மேயர் பிரியாவுடன், மாதவி அரசு விழாக்களில் பங்கேற்பது வழக்கம்.
மேயருக்கு முன்னே செங்கோலை ஏந்தியும் கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவதும் டபேதாரின் பணி. இந்நிலையில், டபேதார் மாதவி திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாதவிக்கு லிப்ஸ்டிக் பூசும் பழக்கம் இருந்ததாலும், அதனை பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகள் அறிவுரை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் அவர் அதை கேட்காதால் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், நான் எப்போதும் பணிக்கு உரிய நேரத்தில் வருவதாகவும் மாதவி கூறினார். இந்நிலையில், டபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என மேயர் பிரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது ஆகிய காரணங்களால் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து மாதவிக்கு பலமுறை மெமோ கொடுத்தும் அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“tamil