சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் அல்லது சொத்து வரி செலுத்த அல்லது புகார் தெரிவிக்க, வீட்டில் ஒட்டப்பட்டுள்ள க்யூ.ஆர் குறீயிட்டை ஸ்கேன் செய்து எளிதாக சேவைகளை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், இனிமேல் சென்னை மாநகராட்சி குடியிருப்பாளர்களுக்கு தங்கள் தண்ணீர் அல்லது சொத்து வரி செலுத்துவது அல்லது மெட்ரோ வாட்டர் (Metro water) வழங்கப்படாதது குறித்து புகார் செய்வது எளிதாகிவிடும். அவர்கள் செய்ய வேண்டியது அவர்கள் வீட்டில் ஒட்டப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். இ-கவர்னன்ஸ் மற்றும் ஜி.ஐ.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, க்யூ.ஆர் குறியீடு மூலம் குடிமக்கள் சேவைகளைச் செயல்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: மதுரை, தூத்துக்குடி, திருப்பூர்… 16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்; 7 பேர் பெண்கள்
சொத்து மற்றும் குடிநீர் வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், பொதுவான குறைகளை பதிவு செய்தல், திட்டங்களுக்கு ஒப்புதல், வர்த்தக உரிமம் பெறுதல், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அரசாங்கத்தால் வெளியிடப்படும் தகவல்கள், குப்பைகள் சேகரிப்பு, சென்னை மாநகராட்சி வரம்புகளுக்குள் பூங்காக்கள் மற்றும் விளையாட்டுப் பகுதிகள் பற்றிய புகார்கள் ஆகியவை புதிய முறையைப் பயன்படுத்துவதன் மூலம் பெறக்கூடிய சில முக்கியமான வசதிகள். இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் தொகை அல்லது குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து விரைவில் பணிகள் முடிக்கப்படும்.
”சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர் ஆகியவற்றில் 80 லட்சம் நுகர்வோர் உள்ளனர், அவர்கள் அனைவரின் வீடுகளிலும் க்யூ.ஆர் குறியீடு ஒட்டப்படும். தற்போது, ஒவ்வொரு முறையும் குடியிருப்பாளர்கள் சென்னை மாநகராட்சி அல்லது மெட்ரோ வாட்டர் தொடர்பாக புகார் தெரிவிக்க விரும்பினால், அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியின் தொடர்பு எண்ணைக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். இரண்டுமே கடினமானது, குறிப்பாக கோடை அல்லது பருவமழை காலத்தில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவர். இதை தவிர்க்க இந்த புதிய வசதி உதவும்,” என மெட்ரோ வாட்டர் அதிகாரி கூறினார்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கடந்த சில மாதங்களாக இந்த அமைப்பில் உள்ள ஓட்டைகளை கண்டறிந்து சரி செய்ய சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. புதிய அமைப்பு முழுமையடைந்து நெறிப்படுத்தப்பட்ட பின்னரே QR குறியீட்டைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது,” என்று கூறினார்.
”குடியிருப்பு பகுதிகள் தவிர, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், தகன மையங்கள், விளையாட்டு மைதானங்கள், நலன்புரி நிலையங்கள் மற்றும் பொதுக் கழிப்பறைகளிலும் QR குறியீடு ஒட்டப்படும். இது இந்த இடங்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கு மக்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மையத்தில் புகார்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தீர்வுக்காக அனுப்பப்படும்,” என்று அந்த அதிகாரி கூறினார்.
”சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர் இந்த அமைப்பை மாநகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தும். அதே நேரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இதை பிற நகராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் செயல்படுத்தும்,” என்றும் அந்த அதிகாரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil