Chennai Tamil News: செல்ல பிராணிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க நான்கு மருத்துவமனையை சென்னை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் விதிகளின்படி செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் அதற்கான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய இடங்களில் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை மையங்கள் செயல்படுத்தப்படுகிறது. இங்கு, மக்களின் செல்லப்பிராணிகளை உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
இதைப்பற்றி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான ஆர்வம் பொதுமக்களிடம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டு வருகிறது.
மன மகிழ்ச்சிக்காகவும் நாய், பூனை, பறவை இனங்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அக்கறையுடன் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும்போது அவற்றிற்கான சிகிச்சை நம்மூரில் கிடைப்பதற்கு கடினமாக இருக்கிறது. இதற்கு வழிவகை ஒதுக்குவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத்துறை கால்நடை மருத்துவப்பிரிவின் சார்பாக நான்கு செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்கள் செயல்படுத்தப்படுகிறது”.
சிகிச்சை மையங்கள் திரு.வி.க. நகர் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், பல்லவன் சாலை திரு.வி.க. நகர், சென்னை -11 கோட்டம் – 68, மண்டலம் – 6. நுங்கம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், பள்ளி தெரு, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034. கோட்டம் – 110, மண்டலம் -9. கண்ணம்மாப்பேட்டை செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், முத்துரங்கன் சாலை, கண்ணம்மாப்பேட்டை, சென்னை – 600 017, கோட்டம் – 141, மண்டலம் -10 மீனம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், நேரு நெடுஞ்சாலை, மீனம்பாக்கம், சென்னை, கோட்டம் – 166, மண்டலம் -12.
இம்மையங்களில் செல்லப்பிராணிகளுக்கு பொதுவாக ஏற்படும் அனைத்து வகை நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும், உடல்நலக் குறைவு ஏற்படாத வகையில் தடுக்க கால்நடை உதவி மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
இம்மையங்களில் செல்ல பிராணிகளுக்கான உரிமம் பெற ரூபாய் 50 கட்டணமாக செலுத்தவேண்டும். வருடத்திற்கு ஒரு முறை இதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தினசரி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை) இயங்கும் இந்த கால்நடை மருத்துவ சிகிச்சை மையங்களின் சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil