சென்னை பெருநகர மாநகராட்சி (GCC) சார்பில் செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம் சனிக் கிழமையன்று மத்தூரில் உள்ள MMDA பூங்காவில் தொடங்கப்பட உள்ளது. இதேபோன்று அனைத்து மண்டலங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் 50 முதல் 60 வேலை நாட்களுக்குள் 1.80 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்துள்ளது.
முதல் கட்டமாக, ஒவ்வொரு மண்டலத்திலும் 3,000 நாய்களுக்கு தடுப்பூசி போட உள்ளதாகவும், மண்டலம் வாரியாக இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த ஆண்டு மட்டும் சென்னையில் 30-க்கும் மேற்பட்டோர் வெறிநாய் கடியால் உயிரிழந்தர். மேலும், செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களிடையே வெறிநாய் கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த மாதம் மாநகராட்சியின் 5 விலங்கு கட்டுப்பாட்டு மையங்களில் 9 வெறிநாய் கடி வழக்குகள் பதிவாகின" என்று தமிழ்நாடு விலங்குகள் வாரிய உறுப்பினர் ஸ்ருதி வினோத்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "புளியந்தோப்பில் அதிகபட்சமாக 5 வெறிநாய் கடி வழக்குகளும், தொடர்ந்து கண்ணாப்பேட்டையில் 2 வழக்குகளும், சோழிங்கநல்லூர் மற்றும் லாயிட்ஸ் காலனியில் தலா 1 வழக்கும் பதிவாகியுள்ளன. இதுமட்டுமின்றி, மீனம்பாக்கம் ABC மையத்தில் 3 வழக்குகளுக்கு உடற்கூறு ஆய்வு அறிக்கைக்காக காத்திருப்பில் உள்ளது" என்று விளக்கினார்.
"வெறிநாய் கடி அறிகுறிகளைக் கொண்ட தெருநாய்களை குடியிருப்பாளர்கள் கண்டால், உடனடியாக சென்னை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நாய்க்கு வெறிநாய் கடி இருப்பதை கண்டறிந்தால், அந்தப் பகுதியில் உள்ள அனைத்து நாய்களுக்கும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
"10 நாட்களுக்கு முன்பு, சில தெருநாய்கள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அவ்வழியாக பெண் நடந்து சென்ற போது, அந்த நாய்கள் அவரைத் துரத்தின. இது மிகவும் பயமாக உள்ளது" என அருணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஷென்பா என்ற பெண் குறிப்பிட்டுள்ளார். "செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களுக்கு வெறிநாய் மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் என 2 வகையான ஊசிகள் போடப்படும். மேலும், 30 சிறப்புப் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இந்தத் தடுப்பூசி பணியில் ஈடுபடுவார்கள்" என்று சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவ அதிகாரி ஜே.கமல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.