Chennai corporation Mayor post allocated to SC Ladies: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கு நடக்கும் இந்த தேர்தல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மாநகராட்சி மேயர் பதவிகளில் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவுகளுக்கான இடஒதுக்கீட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
நகராட்சி நிர்வாக இயக்குனர் 11-ம் தேதி அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிகளை இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிப்பது தொடர்பான கருத்துருவை அனுப்பியிருந்தார். அதை ஏற்றுக் கொண்டு அது தொடர்புடைய விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தார். அவரது கருத்துருவை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்கிறது.
அதன்படி, ஆதிதிராவிடர் (பொது), ஆதிதிராவிடர் (பெண்கள்), பொது (பெண்கள்) ஆகிய பிரிவினருக்கு மேயர் பதவி இடஒதுக்கீட்டிற்கான உத்தரவு வெளியிடப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவி ஆதிதிராவிடர் (எஸ்.சி.) பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் (பொது) பிரிவுக்கு வழங்கப்படுகிறது.
அடுத்ததாக, கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சீபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/IMG-20220117-WA0007.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil