சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான அபராதத்தொகை ரூ5000-ல் இருந்து ரூ10000-ஆக அதிகரித்துள்ளதாக மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள குமரகுருபரன் இந்த கூட்டத்தில் முதல்முறையாக பங்கேற்றிருந்தார். கூட்டம் தொடங்கியதும், சமீபத்தில் மரணமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பட்ஜெட் நகலை கிழித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் 40-க்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தொழில்வரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்றபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தொழில் வரியை அரைவருடத்திற்கு 35 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாகவும், இதனை அங்கீகரிக்க, தமிழக அரசுக்கு ஒரு முன்மொழிவினை அனுப்ப உள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதேபோல் சென்னை மாநகராட்சியின் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் மீதான அபராதத்தொகை ரூ5000-ல் இருந்து ரூ10000-ஆக உயர்த்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாதம் ரூ21 ஆயிரத்திற்கு கீழ் உள்ள நபர்களுக்கு வரி உயர்வு இல்லை.21 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு, ரூ135-185 ரூயாகவும், 30000-40000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு 315-430 ரூபாயாகவும், 45000-60000 வரை வருமானம் உள்ள நபர்களுக்கு 690-930 ரூபாய் வரை வரியை உயர்த்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வரியை 6 மாதத்திற்கு ஒருமுறை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“