Chennai Flood Warning System: வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னை மாநகராட்சி நிர்வாகம் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. வெள்ள பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக, மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதோடு வெள்ள பாதிப்புகளை தடுக்க பிரத்யேகமாக அரசு ஆட்டோமெட்டிக் வாட்டர் லெவல் ரெக்கார்ட் கருவி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பேசிய அதிகாரிகள், சென்னை மாநகர பகுதிகளில் 141 இடங்களில் ஆட்டோமெட்டிக் வாட்டர் லெவல் ரெக்கார்ட் கருவி அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடையும். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை இந்தப் பருவமழைக் காலத்தை சமாளிக்க மாநகராட்சி தயாராக இருக்கிறது.
வெள்ளம் பாதிக்கும் பகுதிகளுக்கு ஒரு நாள் முன்னதாகவே நிவாரணப் பொருட்கள், டீவாட்டரிங் பம்புகள் மற்றும் நிவாரணக் குழுக்கள் அனுப்பும் வகையில் தயாராகி வருகிறது.
3 நாட்களுக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒவ்வொரு சாலைகளிலும் வெள்ளம் எவ்வளவு எதிர்பார்க்கப்படுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். இது தவிர சென்னையில் 14 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கும் பணி இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடையும் என்றனர்.
மேலும் கூறிய அதிகாரிகள், தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலும் வெள்ளத் தடுப்பு வசதி ஏற்படுத்தப்படும். எழிலகத்தில் உள்ள பிரதான கட்டுப்பாட்டு அறை, சென்னை மாநகராட்சியின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவையும் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்படும் என்று கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“