தனியார் பள்ளிகளுக்கு இணையாக இலவச கல்வியை வழங்குவதற்காக சென்னை மாநகராட்சி 127 மழலையர் பள்ளிகளை சென்னையின் பல்வேறு பகுதிகளில் திறக்க திட்டமிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக இலவசக் கல்வியை வழங்குவதற்காக சென்னையில் 211 மழலையர் பள்ளிகளை சென்னை மாநகராட்சி நடத்தி வருகிறது. இந்தநிலையில் புதிதாக 127 மழலையர் பள்ளிகளை சென்னை மாநகராட்சி திறக்க உள்ளது. இந்த புதிய பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளில் மொத்தம் 254 ஆசிரியர்களும், 127 குழந்தை பராமரிப்பு உதவியாளர்களும் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
போரூர், பெருங்குடி, ஆலந்தூர், உத்தண்டி, செம்மஞ்சேரி, நீலாங்கரை, சோழிங்கநல்லூர், வாணுவம்பேட்டை, நங்கநல்லூர், முகலிவாக்கம், மணப்பாக்கம், ஆதம்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், காரப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடியன்பேட்டை, நாராயணபுரம், புழுதிவாக்கம், நெற்குன்றம், முகப்பேர், நொளம்பூர், பழவந்தாங்கல், பட்டரவாக்கம், கொரட்டூர், புழல், சூரப்பேட்டை, மணலி, மாத்தூர், எர்ணாவூர், திருவொற்றியூர், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம் மற்றும் கத்திவாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகங்களிலும், நடுநிலைப்பள்ளி வளாகங்களிலும் இந்த மழலையர் பள்ளிகள் நிறுவப்படும்.
இதற்கிடையில், பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் முயற்சியாக, 500க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட 118 பள்ளிகளுக்கு கணினி உதவியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேல்நிலைப் பள்ளிகளில் அரசியல் அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணக்குப் பதிவியல், வணிகவியல், கணிதம், தமிழ், ஆங்கிலம், புவியியல், புள்ளியியல், கணினி அறிவியல், தணிக்கை மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களைக் கற்பிக்க கூடுதல் முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபடுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, பள்ளிகளை நவீனமயமாக்கும் முயற்சியை சென்னை மாநகராட்சி துவக்கியுள்ளது. இது சென்னை மாநகராட்சியின் பல்வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகுத்தது. பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனமான ஏஜென்சி பிராஞ்சைஸ் டி டெவலப்மெண்ட் (Agence Française de Développement) மற்றும் ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் ஆகியவற்றின் நிதியுதவியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் ஏற்கனவே பல பள்ளிகளில் முடிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளின் நவீனமயமாக்கலுக்கு பிரெஞ்சு ஏஜென்சியின் பங்களிப்பு 80% இருக்கும். ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன், சென்னை மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்திற்குத் தேவையான நிதியில் 20% பங்களித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“