சென்னை மாநகராட்சி விதிமுறைகளை அப்பட்டமாக மீறி, 14 சிறிய அளவிலான டெண்டர்களை வெறும் 24 மணிநேர அவகாசத்தில் அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பூங்கா சீரமைப்பு, வகுப்பறை கட்டுமானம், சாலை புனரமைப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குழாய்கள் பொருத்துதல் போன்ற பணிகளுக்கான இந்த டெண்டர்களின் மொத்த மதிப்பு ₹1 கோடிக்கும் மேல் எனத் தெரிகிறது.
டெண்டர் விதிகள் காற்றில் பறந்தனவா?
தமிழக அரசின் டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகள் 2000-இன்படி, ஒப்பந்ததாரர்கள் டெண்டர்களைப் பார்வையிட்டு விண்ணப்பிக்க குறைந்தது 21 முதல் 90 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்பட வேண்டும். குறுகிய கால டெண்டர்கள் கூட குறைந்தபட்சம் 15 நாட்களுக்குத் திறந்திருக்க வேண்டும். ஆனால், சென்னை மாநகராட்சி புதன்கிழமை மதியம் 1.30 மணிக்கு இந்த டெண்டர்களை அறிவித்து, அடுத்த நாள் பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவகாசம் அளித்திருக்கிறது. அதாவது, டெண்டர்கள் விடப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே அவை திறக்கப்படவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இதே இணையதளத்தில் மாநகராட்சி வெளியிட்டுள்ள மற்ற டெண்டர்களுக்கு 15 முதல் 20 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 24 மணிநேர அவகாசம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இது குறித்து சென்னை ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் ஆர். ராமாராவ் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "எந்த ஒரு டெண்டருக்கும் 15 நாட்கள் அவகாசம் என்பது கட்டாயம். 24 மணிநேரத்திற்குள் ஏன் இதை மூடுகிறார்கள் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட டெண்டராகத் தெரிகிறது. இது போன்ற குறுகிய கால டெண்டர்களுக்கு எதிராக நான் ஏற்கனவே நீதிமன்ற வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளேன். மாநகராட்சி டெண்டர்களில் நியாயமான போட்டியை உறுதி செய்ய வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த எம். ராதாகிருஷ்ணன், 2022-ஆம் ஆண்டில் மணலியில் சாலைகள் அமைப்பதற்கான இதே போன்ற குறுகிய கால டெண்டர் முறைகேட்டை சுட்டிக்காட்டினார். "மாநகராட்சி ஆகஸ்ட் 2022-இல் பணியை முடித்துவிட்டு, அக்டோபரில் அதே பணிக்கான பெயரளவு டெண்டரை வெளியிட்டதை நாங்கள் தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் ஒம்புட்ஸ்மேன் முன் நிரூபித்தோம். ஆனாலும், எந்த FIR-ம் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதிகாரிகள் இதை மீண்டும் செய்திருக்க மாட்டார்கள்," என்றார் அவர்.
24 மணிநேரத்திற்குள் 2-3 பேர் கூட டெண்டரில் பங்கேற்க வாய்ப்பில்ல, மாநகராட்சி வழக்கமான டெண்டர் விதிமுறைகளை மீறக்கூடாது. "இந்த ஆண்டு மெரினா கடற்கரையில் பேட்டரி வாகனங்கள் (BOV) கொள்முதல் செய்யப்பட்டதிலும் கூட, ஒரு வரையறுக்கப்பட்ட டெண்டரைத்தான் வெளியிட்டனர். தனிப்பட்ட டெண்டர்களின் மதிப்பு குறைவாக இருக்கலாம், ஆனால் 15 மண்டலங்களிலும் உள்ள இத்தகைய டெண்டர்களைப் பெருக்கும்போது பல கோடி ரூபாயாக இது மாறும்" என்று ராதாகிருஷ்ணன் மேலும் கூறினார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே. குமாரகுருபரன் மற்றும் துணை ஆணையர் (பணிகள்) வி. சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை. "டெண்டர்கள் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை திறந்திருக்கும்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். துணை மேயர் மகேஷ் குமார் இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதாகக் கூறியுள்ளார்.