சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பல்வேறு வாகன நிறுத்துமிடங்களில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என மாநகராட்சி அறிவித்துள்ளது. வாகன நிறுத்துமிடக் கட்டண வசூலுக்கான ஒப்பந்த காலம் நேற்று (ஜூலை 20, 2025) முடிவடைந்ததையடுத்து, மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை இந்தச் சலுகை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியை இதுவரை தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகம் மேற்கொண்டு வந்தது. அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் வரை பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மாநகராட்சிக்குச் சொந்தமான அனைத்து நிறுத்துமிடங்களிலும் எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் நிறுத்திக்கொள்ளலாம்.
இந்த அறிவிப்பு சென்னை வாகன ஓட்டிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் கட்டணமில்லா வாகன நிறுத்தம் கிடைப்பது, பொதுமக்களுக்கு நிதிச் சுமையைக் குறைப்பதுடன், போக்குவரத்து நெரிசலையும் ஓரளவுக்கு சீர்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாகன நிறுத்தக் கட்டணம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற இலவசத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த இடைக்கால ஏற்பாடு, மறு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் வரை தொடரும்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தகம் கட்டண வசூல் பணிக்காக ஒப்பந்தம் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்திற்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் நேற்றுடன் (ஜூலை 20) முடிவுக்கு வந்துள்ளது.
அதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்தகங்களுக்கான ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. மறு ஒப்பந்தம் செய்யப்படும் வரை வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் எண்ட கட்டணமும் இன்று நிறுத்திக் கொள்ளலாம்.இதில் ஏதேனும் புகார்கள் இருக்கும்பட்சத்தில் அதை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொண்டு தெரிவிக்கலாம்" என கூறப்பட்டுள்ளது.