மனைவி மீது சந்தேகம் கொண்டு துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த கணவருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூரை சேர்ந்த கௌரிசங்கர் மற்றும் முத்துலஷ்மிதேவிக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் சென்னையில் குடியேறினார். கௌரி சங்கர் தனியார் மருந்து விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு மனைவி மீது சந்தேகம் அடைந்த கௌரி சங்கர், முத்துலஷ்மி தேவியை துன்புறுத்தியுள்ளார். தகாத வார்த்தைகளால் திட்டி, ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து இதே நிலை இருந்து வந்ததால் முத்துலஷ்மி தேவி, அவரின் பெற்றோரிடம் இது குறித்து தொரிவித்துள்ளார். இதனையடுத்து அவரின் பெற்றோர்கள் வந்து மகளை வேலூர்க்கு அழைத்து சென்றனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி முத்துலக்ஷ்மி புகார் அளித்தார். அந்த புகாரின் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் வழக்கை சென்னை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
பின்னர் கௌரி சங்கர்க்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்ட 9 ஆவது பெரு நகர குற்றிவியல் நடுவர் நீதிமன்றம் கௌரி சங்கருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் 2000 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கௌரி சங்கர் மேல் முறையீடு செய்தார்.
இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி கே.தனசேகர், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, விசாரணை நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றை உறுதி செய்வதாகவும் நீதிபதி தனசேகர் உத்தரவிட்டார்.