இந்தியாவின் பல பகுதிகளில், கொரோனா நோய்த் தொற்று உறுதிபடுத்தப்படும் விகிதம், சரிவை சந்தித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சியில் அந்த விகிதம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
உறுதிபடுத்தப்படும் விகிதம் என்பது, சமூகத்தில் ஒரு கொரோனா பாதிப்பை உறுதி செய்ய எத்தனை மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன என்பதை இது குறிக்கிறது.
உதாரணமாக, ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த விகிதம் 1க்கும் குறைவாக உள்ளது. அதாவது, ஒரு கொரோனா நோயாளியைக் கண்டறிய அந்த நாடு எண்ணற்ற சோதனைகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. உறுதிபடுத்தப்படும் விகிதம் 5க்கும் குறைவாக இருந்தால் கொரோனா பெருந்தொற்று குறைந்ததாக கருதலாம் என்று உலக சுகாதார அமைப்பு முன்னதாக தெரிவித்திருந்தது.
சென்னை மாநகராட்சியின் நிலை:
சென்னை மாநகராட்சியில், கொரோனா உறுதிபடுத்தப்படும் விகிதம் ஆகஸ்ட் முதல் வாரத்தில், 7% ஆக இருந்த நிலையில், தற்போது 10.7% ஆக அதிகரித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் ஆரம்பத்தில் நோய்த் தொற்று உறுதிபடுத்தப்படும் விகிதம் உயர்வுக்கு வழிவகுக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தாலும், உடனடி தனிமைப்படுத்தல், திறமையான கண்காணிப்பு மற்றும் சரியான நேரத்தில் பயனுள்ள மற்றும் மருத்துவ மேலாண்மை போன்ற பிற நடவடிக்கைகளுடன் இணைந்தால் நாளாக நாளாக இந்த விகிதம் குறையும் (சோதனை அதிகரித்தாலும் கூட) என்பதே அடிப்படை படிப்பினை .
chennai Covid-19 Latest updates
உதரணமாக, இந்தியாவில் கொரோனா மருத்துவ பரிசோதனை அதிகரிக்க, கொரோனா நோய்த் தொற்று உறுதிபடுத்தப்படும் விகிதம் சரியத் தொடங்கியது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் 9.67% ஆக இருந்த விகிதம், மூன்றாவது வாரத்தில் 7. 67% ஆக குறைந்தது.


சென்னையில் கொரோனா உறுதிபடுத்தப்படும் விகிதம் உயர்வுக்கு இ-பாஸ் நடைமுறையில் கொண்டு வந்துள்ள தளர்வுகள் முக்கிய காரணம் என்று ஆய்வளார்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். `விண்ணப்பித்த அனைவருக்குமே இ-பாஸ் வழங்கப்படும்’ என்று தமிழக அரசு முன்னதாக அறிவித்தது.
இ-பாஸ் நடைமுறையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து வந்த பல மண்டலங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திரு வி.க நகர்( மண்டலம் 6 ), தண்டையார் பேட்டை (மண்டலம் 4 ), சோழிங்கநல்லூர் (மண்டலம் 15), வளசரவாக்கம் (மண்டலம் 11) ஆகிய மண்டலங்களில் கடந்த ஏழு நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையில் நேற்று மட்டும் 1,298 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, மாநகராட்சியின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,25,389 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil