சென்னை பெருநகராட்சி சனிக்கிழமை ஒரே நாளில் 20,012 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது. கடந்த 2020ஆண்டு மார்ச் மாதம் தொற்று பரவ தொடங்கியதிலிருந்து முதல் முறையாக இவ்வளவு பரிசோதனை எண்ணிக்கையை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளாட்சி அமைப்புகள் வெளியிட்ட தகவலின்படி, பரிசோதனையில் பாசிட்டிவ் விகிதம் கடந்த இரண்டு நாட்களாக 19.6% ஆக உயர்ந்த நிலையில், சனிக்கிழமை 20.42%ஆக உயர்ந்துள்ளது. நகரில் சோதனை செய்யப்படும் ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் வருகிறது. சென்னையில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படும். வரும் நாட்களில் அது 25000 த்தை எட்டும். அடுத்த 30-35 நாட்கள் சென்னைக்கு மிக கஷ்டமான நாட்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். நிபுணர்களின் கணிப்புகள் படி, மே மாதத்தின் நடுப்பகுதியில் அல்லது இறுதிக்குள் சென்னை அதன் உச்ச எண்ணிக்கையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொற்று பாதித்தவர்களின் தொடர்பு விரிவானதாக இருக்கும் என்பதால் பரிசோதனை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒவ்வொரு பாசிட்டிவ் நபர்களின் தொடர்பில் உள்ள 8 பேரை மாநகராட்சி பரிசோதித்து வருகிறது. இந்த தொடர்புகளில் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் போன்ற குடும்ப தொடர்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பணிப்பெண்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிறர் போன்ற நீட்டிக்கப்பட்ட தொடர்புகள் அடங்கும். அதேபோல் பணிபுரியும் இடங்களில் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்களுடைய சக பணியாளர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
முழு முடக்கம் அமலில் இருந்தபோது, தொடர்புகளை கண்டறிவது முழுமையாக நடைபெற்றது. அதேபோல் தொற்று பாதித்தவர்கள் நிறை பேரை தொடர்புகொள்ளாமல் இருந்தனர். ஆனால் தற்போது பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். இதனால் அதிகமான தொடர்புகளை கண்டுபிடிக்க முடிவதில்லை.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 8 மண்டலங்களில் 2000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளது. தண்டையார்பேட்டையில் 2,203 பேரும், ராயபுரத்தில் 2,520 பேரும், திருவிக நகரில் 2,952 பேரும், அம்பத்தூரில் 2,413 பேரும், அண்ணா நகரில் 3,295 பேரும், தேனாம்பேட்டையில் 3,318 பேரும், கோடம்பாக்கத்தில் 2,794 பேரும், அடையாறில் 2,318 பேரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"