Chennai covid19 updates : சென்னை மாநகராட்சியில் அமைந்திருக்கும் கொரோனா சிகிச்சை மையங்கள் அனைத்திலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 11,645 படுக்கை வசதிகள் கிட்டத்தட்ட நிரப்பப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ம் தேதி அன்று மொத்தமாக 1104 படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பிறகு ஏப்ரல் 22ம் தேதி அன்று எண்ணிக்கை 1900 ஆக உயர்ந்தது. பிறகு திங்கள் கிழமை அன்று 2948 படுக்கைகள் நிரப்பப்பட்டது. 5 நாட்களுக்கு முன்பு இருந்த நிலையைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகம்.
கொரோனா சிகிச்சை மையங்களில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, லேசானது முதல் மிதமான நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் மற்றும் வீட்டில் தனியாக படுக்கை அறை வசதி அற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னையில் தற்போது 31,500 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 20 ஆயிரம் பேருக்கு சோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேர்மறை விகிதம் 20% ஆகும். ஞாயிற்று கிழமை அன்று 4206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த எண்ணிக்கை மே மத்தியில் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 80 லட்சம் மக்கள் தொகையை கொண்ட மாநகரத்தில் 3.09 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 4567 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சோதனை மற்றும் தடம் அறிதல் போன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை கொண்ட தெருக்களின் எண்ணிக்கை வெள்ள்ளிக்கிழமை 249 ஆக இருந்தது. தற்போது அது 308 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை பகுதிகளில் முறையே 64 மற்றும் 65 தெருக்களில் 10க்கும் மேற்பட்ட கொரோனா நோய் தொற்று கொண்ட மக்கள் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil