Two men arrested for smuggling gold under their wig Tamil News : கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தைக் கடத்த முயன்ற இருவரைச் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். அதிகாரிகள் வெளியிட்டுள்ள காணொளியில், நபரின் டோப்பாவை அகற்றுவதுபோல் இருக்கிறது. டோப்பாவுக்கு அடியில் ஓர் பாக்கெட் ஒட்டப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. அந்த பாக்கெட்டில் தங்கம் இருப்பதும் இரண்டு பயணிகள் துபாயிலிருந்து தங்கத்தைக் கடத்த முயன்றதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
Advertisment
ஃப்ளை-துபாய் FZ8515 விமானத்தில் வந்து இறங்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த 39 வயதான மக்ரூப் அக்பராலி மற்றும் சென்னையைச் சேர்ந்த 26 வயதான சுபைர் ஹசன் ரபியுத்தீன் ஆகியோரின் சிகை அலங்காரங்கள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் நிலையத்தை விட்டு வெளியேறும்போது சுங்க அதிகாரிகளால் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். பரிசோதனையில், அவர்கள் விக் அணிந்திருப்பதும், ஓரளவு சொட்டைத் தலை இருப்பதும் கண்டறியப்பட்டது. 698 கிராம் எடையுள்ள இரண்டு தங்க பேஸ்ட் பாக்கெட்டுகள் அவர்களுடைய விக்கின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 595 கிராம் தங்கம் மீட்கப்பட்டிருக்கிறது.
மற்றொரு வழக்கில், அதே விமானத்தில் வந்த திருச்சியைச் சேர்ந்த 42 வயதான பாலு கணேசன், தடுத்து நிறுத்தப்பட்டு, 622 கிராம் தங்கம் வைத்திருந்த மூன்று மூட்டை தங்க பேஸ்ட்கள் அவரது மலக்குடலிலிருந்து மீட்கப்பட்டன. இந்த கடத்தல் வழக்கில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், கடந்த இரண்டு நாட்களில், ரூ.2.53 கோடி மதிப்புள்ள மொத்தம் 5.55 கிலோ தங்கம், வளைகுடா நாடுகளிலிருந்து புறப்பட்ட பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோப்பாவிற்கு கீழ், பயணிகளின் சாக்ஸ், உட்புற ஆடைகள் மற்றும் அவர்களின் மலக்குடல் உட்பட தங்கம் வெவ்வேறு வழிகளில் மறைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தங்கம் கடத்த முயன்ற மொத்தம் 6 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil