Lok Sabha Election | Dr Radhakrishnan: தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. சரியாக நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு முடிந்ததும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளையும் சேர்ந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணி லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "லயோலா கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் 156 கேமராக்கள் கொண்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளோம். இங்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.
வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜூன் 4-ம் தேதி வரை தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்கும். கட்டுப்பாட்டு அறையை திறக்க 2 சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்படும். ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும்.
தேர்தல் ஆணையம் சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த ஆண்டு சென்னையில் 4% வாக்குப் பதிவு குறைந்துள்ளது. நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். நகர்புறங்களில் வசிக்கும் மக்களில் 10-ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். இதன் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் மந்தமாக இருந்துள்ளது." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“