சென்னை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் கடந்த அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்றது. பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன், ரிப்பன் மாளிகையில் நேற்று(ஜன.6) வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் பட்டியலை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சென்னை வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது. ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 70 ஆயிரத்து 279 பேர், பெண் வாக்காளர்கள் 20 லட்சத்து 44 ஆயிரத்து 323 பேர், மூன்றாம் பாலினத்தினர் 1,276 பேர் உள்ளனர்.
கடந்த அக்.29-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது சென்னையில் 63 ஆயிரத்து 380 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 980 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 642 வாக்காளர்களும் உள்ளனர்.
இந்த திருத்தப்பட்ட பட்டியல், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://voters.eci.gov.in/ என்ற இணையதளம், தேர்தல் பதிவு அலுவலர் அலுவலகங்கள், வாக்குச் சாவடிகள் சென்றும் தெரிந்து கொள்ளலாம்.