உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின் மாசு தர அளவையும் மற்றும் ஒலி மாசு அளவையும் கண்டறிய பெருநகர சென்னை மாநகரத்தில் பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌக்கார்பேட்டை, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய ஏழு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, தீபாவளி நாளான நவம்பர் 12 அன்று, சென்னையில் காற்றுத்தர குறியீட்டு அளவு (AQI) காலை 6 மணி முதல் மறுநாள் 13.11.2023 காலை 6 மணி வரை, 207லிருந்து 365 வரை (மிக மோசமான அளவுகள்) என கண்டறியப்பட்டது.
இதில் குறைந்த அளவாக பெசன்ட் நகரிலும் (207 AQI) அதிக அளவாக வளசரவாக்கத்திலும் (365 AQI) பதிவானது.
இருப்பினும் சென்ற ஆண்டை விட நடப்பாண்டு தீபாவளி (2023) காற்றின் தர மாசின் அளவு 40 விழுக்காடு (AQI) குறைந்துள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால் அதேநேரம் தீபாவளி பண்டிகையின்போது அதிகளவு ஒலி மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த ஒலி மாசு அளவுகள், வரையறுக்கப்பட்ட தேசிய சுற்றுப்புற ஒலிமாசுபாட்டின் அளவுகளை விட அதிகமாக இருந்தன. (பகல் நேரங்களில் 65.0 dB(A), இரவு நேரங்களில் 55.0 dB(A) அளவு நிர்ணயிக்கப்பட்டது).
கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவாக, அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 83.6 dB(A) அளவு பதிவாகியுள்ளதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“