சென்னையில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றதால், வழக்கமாக பரபரப்பாக இருக்கும் சென்னை மாநகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
வெறிச்சோடியது சென்னை :
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டப்பட்டு வருகிறது. பணி நிமித்தம், தொழில், படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியூரை சேர்ந்த லட்சக்கணக்கானோர் சென்னையில் வசித்து வருகின்றனர்.
சனி, ஞாயிறு, தீபாவளி என 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து முன்கூட்டியே பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
பொதுமக்களின் வசதிக்காக கடந்த 2-ம் தேதி முதல் கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே.நகர் உள்பட சென்னையில் 6 மார்க்கங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 2-ம் தேதி முதல் இன்று வரை சுமார் 11,500 பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக கடந்த 3-ம் தேதி 3,821 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், அன்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் இருந்து 2,23,178 பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 6.34 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இந்த வகையில் ஒரே நேரத்தில் பேருந்து, ரயில், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் சென்னை மாநகர சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.