நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு எதிராக தி.மு.க தீர்மானம் எனப் பல சம்பவங்கள் நேற்று நடைபெற்றது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ட்விட்டரில் ட்ரெண்டான #GetoutRavi என்ற வாசகத்தை அச்சிட்டு சென்னையில் தி.மு.க பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023-ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 9) ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை தொடங்கியபோதே தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.
அண்மையில் ஆளுநர் ரவி தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் என்று கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில் ஆளுநர் உரை கடும் அமளிக்கு பிறகு தொடங்கியது.
இந்நிலையில், ஆளுநர் தனது உரையில் கூறப்பட்டிருந்த திராவிட மாடல், அண்ணல் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி, சமூக நீதி, சமத்துவம் போன்ற வார்த்தைகளை தவிர்த்து விட்டு படித்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஆளுநர் தனது உரையை முழுமையாக படிக்கவில்லை என்று அளுநர் அவையில் இருக்கும் போதே குற்றஞ்சாட்டினார். ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் அவை மரபை மீறி செயல்பட்டார் எனக் கூறியும், அச்சிடப்பட்ட ஆங்கில மற்றும் தமிழ் உரையில் உள்ளது மட்டும் அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் எனவும் கூறி ஸ்டாலின் தீர்மானம் முன்மொழிந்தார்.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சம்பவங்கள் இந்திய அளவில் பேசுபொருளானது. ஆளுநர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே வெளியேறினார், அரசியலமைப்பை மீறி செயல்பட்டார் என தி.மு.க கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், சமூகவலைதளமான ட்விட்டரில் #GetoutRavi (கெட் அவுட் ரவி) என்ற வாசகம் ட்ரெண்டானது. தொடர்ந்து, இன்று காலை சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் #GetoutRavi என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Twitter No.1 Trending எனக் குறிப்பிட்டு, #GetoutRavi எனப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி என மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சிற்றரசு, வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம், ஜெமினி மேம்பாலம், எஸ்.ஐ.டி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஆளுநர்-ஆளும் கட்சி மோதல் உச்சம் அடைந்துள்ள நிலையில் இந்த போஸ்டர்களால் மேலும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.