New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/drone-delivery-copy.jpg)
Tamil News Updates
Tamil News Updates
சென்னையில் அனுமதியின்றி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில், தலைமைச்செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், தூதரகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறை அலுவலகங்கள், மத்திய மாநில முக்கிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிப்பாட்டு தலங்கள், தேசிய பூங்காக்கள், மற்றும் காடுகள் போன்ற இடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், திருமணம், கோயில் திருவிழா, சினிமா, குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் காவல் துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகே டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க அனுமதியுள்ளது.
இந்நிலையில், சமீபகாலமாக ஒரு சிலர் தடை செய்யப்பட்ட இடங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள இதர இடங்களிலும் உரிய அனுமதியில்லாமல் டிரோன்கள், மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, இனிவரும் காலங்களில் உரிய அனுமதியில்லாமலும், தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளிலும் டிரோன்கள், மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றது.
ஆகவே, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில், உரிய காவல் துறையின் அனுமதியுடன் டிரோன்கள், மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பயன்படுத்த காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று உயர் நீதிமன்றம், ரிசர்வ் வங்கி ஆகிய இடங்களை ஆளில்லா விமானம் மூலம் படம்பிடித்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சார்லஸ் என்ற இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது டிரோன் கேமராவை பறிமுதல் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.