சென்னையில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக போலீஸார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் கஞ்சா, குட்கா போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்த 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவலை 10581 மற்றும், 94984 10581 என்ற எண்களிலும் spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.
தமிழ்நாட்டில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய இரு நாள்களில் மட்டும் ரூ.633 கோடிக்கு மது விற்பனையானது.
அதை சுட்டிக்காட்டிய பாமக தலைவர் ராமதாஸ், ’தமிழ்நாட்டில் குக்கிராமங்களின் சந்து பொந்துகளில் கூட கஞ்சா தடையின்றி கிடைக்கிறது. மதுவும், கஞ்சாவும்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சட்டம் - ஒழுங்குக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.
மது போதையில் நடைபெறும் விபத்துகள் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள்தான் தமிழகத்தின் அமைதிக்கு ஆபத்தாக உள்ளன.
எனவே, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதுடன், கஞ்சா நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“