சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் போதை பொருட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 58 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்பேரில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதைப் பொருள் விற்றதாக 31 வழக்குகள் பதியப்பட்டு, 58 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 61.42 கிலோ கஞ்சா, 60 கிராம் போதைப் பொருள், 5789 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“