சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் இ-மெயிலில் அனுப்பப்பட்டுள்ளது. இதனால்,சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் புறப்பட சுமார் இரண்டு மணி நேரம் தாமதமானது.
காலை 9 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் வந்துள்ளது. இதன் காரணமாக, காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் பயணிகள் ஏறவில்லை. இதனையடுத்து, சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிற அவசரகால குழுவினர் விமானத்தில் இருந்த பொருட்களை கீழே இறக்கிய பிறகு விமானத்தை சோதனையிட்டனர். சுமார் 3 மணி நேர தீவிர சோதனைக்கு பிறகு விமானத்தில் வெடிகுண்டு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு பொய்யான தகவல் என்றும், அதே நபர் தான் ஏற்கனவே விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் அனுப்பியவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த இ-மெயில் அனுப்பியவரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“