திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திமுகவை மறைமுகமாக சாடும் வகையில் அழகிரி மகன் துரை தயாநிதியின் ட்விட்டர் பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடக்குமா? நடக்காதா? நம்பலாமா? நம்ப கூடாதா? தமிழக அரசியல் தலைவர்கள் மைண்ட் வாய்ஸ் இதுதான். வரும் ஜனவரி 28ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்ட திரூவாரூர் இடைத்தேர்தல் பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
துரை தயாநிதி ட்வீட்:
ஒரு பக்கம் வேட்பாளரை அறிவித்த அரசியல் கட்சிகள், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டவுடன் அதை வரவேற்கவும் செய்தனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை வரவேற்பதாக கூறியிருந்தார். "தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியானது. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து 20 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்.” என்று வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஸ்டாலினின் இந்த கருத்து ஏற்கனவே சர்ச்சைகளை சந்தித்திருந்தது. இதற்கிடையில்,திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதையும், அதற்கு ஸ்டாலினின் கருத்தையும் மறைமுகமாக சாடும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி ட்வீட் செய்துள்ளார்.
திருவாரூ தொகுதி என்பதால், இங்கு அழகிரி சுயேட்சையாக நிற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுக வில் இணைய அழகிரி பலமுறை முயற்சி செய்த போதும் பலன் கிட்டவில்லை. இதனால் அவர் தனித்து தேர்தலை சந்திப்பார் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், துரை தயாநிதி பதிவிட்டிருக்கும் ட்வீட்டில், “ நீங்கள் ஒரு விஷயத்தில் நம்பிக்கை வைத்திருந்தீர்கள் என்றால் துணிந்து போராடுங்கள்... நீங்கள் வெற்றி பெறுவீர்களா அல்லது தோல்வி பெறுவீர்களா என்பதெல்லாம் நீங்கள் போட்டியை எதிர்கொண்ட பிறகுதான் தெரியும். ஆனால், இங்கே சிலர் போட்டியை எதிர்கொள்ளவே துணிவில்லாமல் அச்சமடைகின்றனரே" என தெரிவித்துள்ளார்.
கூடவே, #Thiruvarur என்ற ஹேஷ்டேக் கீழ் இதனை பதிவிட்டு இருக்கிறார். துரையின் இந்த பதிவு திமுக வில் சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது.