சென்னை கிழக்கு கடற்கரை (ஈ.சி.ஆர்.) சாலையில் பெண்கள் சென்ற காரை தி.மு.க கொடி பொருத்திய சொகுசு காரில் துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த வீடியோவில், இரண்டுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒரு காரில் ஈ.சி.ஆர் சாலையில் நள்ளிரவு சென்றுள்ளனர். அப்போது, அந்த காரை தி.மு.க கட்சிக்கொடி பொருத்திய காரில் வந்த ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறிக்கின்றனர்.
இளைஞர்களை கண்டு அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். திடீரென அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர். ஆனாலும், அந்த பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளில் இளைஞர்கள் மீது கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இளைஞர்களை வலை வீசி தேடி வந்தனர்.
இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சோழிங்கநல்லூர் நீதிமன்ற மேஜிஸ்திரேட் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த 5 ஆவது நபர் சந்துருவையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சந்துரு தான் சம்பவத்தின்போது காரை இயக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.