New Update
00:00
/ 00:00
தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, நாடு முழுவதும் மாதிரி நடத்தை விதிகள் (MCC) அமலில் உள்ளன. வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த பயன்படுத்தக்கூடிய பணம், மதுபானம், நகைகள் மற்றும் பிற இலவசப் பொருட்களைக் கொண்டு செல்வது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனையிட்டனர். அப்போது எஸ்.7 கோச்சில் வந்த 3 நபர்கள், சூட்கேசில் மறைத்து வைத்து ரூ.4 கோடி பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூவரும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி காவல் இணை ஆணையர் மகேஸ்வரி மற்றும் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் 3 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜன் முன்னிலையில் போலீசார் கருவுலத்தில் ஒப்படைத்தனர்.
நெல்லை தொகுதியில் இம்முறை பாஜக நேரடியாக களம் கண்டுள்ளது.
அந்த தொகுதியில் தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் பாஜகவின் நயினார் நாகேந்திரன் மக்களவை தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.