பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரம் பதிவு செய்தது தொடர்பாக இன்று மத்திய அமலாக்கத்துறை நேரடியாக பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது புதுவை அதிகாரிகள், அரசியல் கட்சியினரிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுர அடி நிலம் ரெயின்போ நகரில் உள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ 50 கோடியாகும். இந்த நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மனைகளாக பிரித்து விற்றுள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உட்பட 15 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்னர்.
மேலும் அப்போது மாவட்ட பதிவாளராக இருந்த ரமேஷ், நில அளவை துறை இயக்குனர் பாலாஜி ஆகியோரையும் வழக்கில் குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் இணைத்துள்ளனர். இதையடுத்து இவர்கள் 2 பேரும் சஸ்பெண்ட்டு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமறைவாக உள்ளனர். பத்திரப்பதிவு மோசடியில் பாஜக எம்எல்ஏக்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அமலாக்கத்துறை, கடந்த 30ந் தேதி காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பு, பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டு பெற்றுள்ளனர். மேலும், புதுவை அரசின் சார்பு செயலருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆவனங்களை வழங்க கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதனிடையே வரும் 19ந் தேதி புதன்கிழமை சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில், காமாட்சியம்மன் கோவில் அறங்காவலர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளும்கட்சி அரசியல்வாதிகள் தொடர்புடைய இவ்வழக்கு ஏற்கனவே புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மத்திய அமலாக்கத்துறை நேரடியாக பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது, புதுவை அதிகாரிகள், அரசியல் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.