தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் வீடு வீடாக சென்று, காய்ச்சல் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் தற்போது புது பிரச்சனையாக, காய்ச்சல் கணக்கெடுக்கும் பணியாளர்களை சிலர் வீடுகளுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் வீடுகளுக்குள்ளோ அல்லது குடியிருப்புகளுக்குள்ளோ அனுமதிக்க மறுக்கின்றனர்.
பணியாளர்கள் தங்கள் கடமையைச் செய்வதைத் தடுத்தால் அத்தகைய குடியிருப்பாளர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல் துறையில் புகார் அளிப்பார்கள் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
காய்ச்சல் பாதிப்புகளைக் கண்காணிப்பதற்காக சென்னை முழுவதும் 15 மண்டலங்களில் சுமார் 12,000 காய்ச்சல் கணக்கெடுப்பு ஊழியர்களை மாநகராட்சி பணியமர்த்தியுள்ளது.
நேற்று திங்கட்கிழமையன்று, 32 வது வார்டில் உள்ள வீடுகளுக்கு ஆக்சிஜன் செறிவான SpO2 மற்றும் உடல் வெப்பநிலையை சரிபார்க்க வந்த காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்களை குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைய விடாமல் அங்குள்ளவர்கள் தடுத்துள்ளனர்.
துப்புரவு ஆய்வாளர்களின் பிரதிநிதிகளில் ஒருவர், காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்கள் தரை தளத்தில் ஒரு நோயாளியின் இல்லத்திற்கு வருகை தந்தபோது, கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள ஒருவர் தொழிலாளர்களுடன் சண்டையிடத் தொடங்கினார், என்று கூறியுள்ளார்.
குடியிருப்பாளர்கள் பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் அவர்களின் குடியிருப்பில் சோதனையிட வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்களே அக்கம் பக்கத்திலுள்ள கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அவர்களை அனுப்பிய அதிகாரிகள் பற்றிய விவரங்களையும் அவர்களிடம் கேட்டுள்ளனர்.
இப்படியான வாக்குவாதத்திற்குப் பிறகு, மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறை மூன்று மணி நேரத்திற்குப் பிறகுதான் அந்த இடத்திற்கு வந்தது. மூன்று மணி நேரம் தாமதமாக வந்த பிறகும், பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குடியிருப்பாளர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர், புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரி மூலம் புகார் அளிக்குமாறு கூறி காவல்துறையினர் அவர்களை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்கள் கணக்கெடுப்பிற்குச் செல்ல பயப்படுகிறார்கள். காவல்துறையின் உதவியின்றி நோயாளிகளின் குடியிருப்புகளுக்கு அவர்கள் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
ஆனால், காய்ச்சல் கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், சுகாதாரத் துறை துணை ஆணையர் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு முன்னரும் இதுபோன்ற சில சம்பவங்கள் நடந்துள்ளன. நாங்கள் பிரச்சினைகளை தீர்த்துள்ளோம். காய்ச்சல் கணக்கெடுப்பு ஊழியர்களை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அனுப்பியுள்ளதால் அவர்களுடன் ஒத்துழைக்குமாறு குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், என்றும் சுகாதாரத் துறை துணை ஆணையர் தரப்பில் கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.