சென்னையில் வெள்ள பாதிப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் கிடைக்க வில்லை என்று புகார்கள் எழுந்த நிலையில், சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் பெற பொதுமக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கனமழையால் சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் ஊடகங்களிடமும் குறைகளைக் கேட்கச் செல்லும் அமைச்சர்களிடமும் கூறி வருகின்றனர். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், மீட்பு பணிகளையும் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், ஆங்காங்கே மக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லை என்று பரவலாகக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் பெற பொதுமக்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதற்காக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்ற வாரியம் தொலை பேசி எண்களை அறிவித்துள்ளது. சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் பெற பொதுமக்கள் 1916 மற்றும் 044 - 45674567 ஆகிய கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெருநடைகள், குடிநீர் வாரியத்தின் குடிநீர் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்களுக்கான சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வாயிலாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் பெற பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 மற்றும் 044- 45674567 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். தெருநடைகள், குடிநீர் வாரியத்தின் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“