தமிழகத்தி்ல் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தனது பங்களிப்பாக முதல்வர்ஸ்டாலின், ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக அறிவித்தார். மேலும் அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை சிறு பங்களிப்பாக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிப்பதாக அக்கட்சியின் சட்டப் பேரவை தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒரு மாத சம்பளத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்காமல், நேரடியாக மக்களுக்கு நிவாரண உதவிகளாக வழங்குமாறு அக்கட்சி அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு, அக்கட்சியின் எஸ்.சி., துறை தலைவர் ரஞ்சன் குமார் எழுதியுள்ள கடிதம் வருமாறு: ‘காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரின் ஒரு மாத சம்பளத்தை, முதல்வரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளீர்கள். நல்ல விஷயம் தான். இருந்தாலும், இதில் என் கருத்தையும் பதிவு செய்வது கடமை.
தொழிலதிபர்கள் மற்றும் சினிமா நடிகர்களுக்கு மக்களுடன் நேரடி தொடர்பு இல்லை. எனவே, அவர்கள் அரசிடம் நேரடியாக நிவாரண உதவித் தொகையை வழங்குகின்றனர். நம் கட்சிக்கு, தமிழகம் முழுதும் அடித்தள கட்டமைப்பு பலமாக இருக்கிறது.
எனவே, 18 எம்.எல்.ஏ.,க்களின் ஒரு மாத சம்பளத்தை, கட்சியே நேரடியாக மக்களுக்கு நிவாரண உதவிகளாக வழங்குவது தான் சிறந்ததாக இருக்கும். நாமே மக்களை நேரடியாக சந்தித்து கொடுத்தால் தான், நம் கட்சியின் செயல்பாடு மக்களுக்கு தெரிய வரும்.
மாறாக, முதல்வரிடம் தரும் போது, பத்தோடு பதினொன்றாக போகக்கூடும். நாம் நேரடியாக மக்களிடம் வழங்கினால், மக்களுடனான உறவை பலப்படுத்த முடியும்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வழங்கும் நிவாரண தொகையை, நம் கட்சியின் திருவள்ளூர் எம்.பி., வேளச்சேரி எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சியில் உள்ள, 15 காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாயிலாக, மக்களுக்கு நேரடியாக வழங்கலாம்.
இது தவிர, மாவட்ட, நகர, வட்டார தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழியாகவும் வழங்கலாம். இந்த யதார்த்த உண்மையை புரிந்து, சரியான முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன், என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.