வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3, 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6,000 நிவாரணம் வழங்கும் பணியை இன்று காலை சென்னை, வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளதையொட்டி, தி.மு.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,’சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதிகள் பலவற்றிலும் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டு, மற்ற இடங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்தான் மிக்ஜாம் புயலையும் கனமழையையும் எதிர்கொள்ள நேரிட்டது.
ஒரே நாளில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையின் அளவு 40 சென்ட்டி மீட்டருக்கு மேல் என்பதால் சென்னை கடந்த 50 ஆண்டுகளில் காணாத பேரிடரை எதிர்கொண்டது. டிசம்பர் 4-ஆம் நாள் முழுவதும் கனமழை பெய்த நிலையில், மறுநாள் (டிசம்பர் 5) அதிகாலைக்குள்ளாக ஏறத்தாழ பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்திருந்தது. அதற்கு காரணம், திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் பணிகளும், மழை பெய்த நேரத்திலும் மாநகராட்சி மற்றும் அரசுத் துறை பணியாளர்களின் அயராத உழைப்பும்தான்.
2015-ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீரை முறையான வகையில் திறக்காமல், ஒரே இரவில் அளவுக்கதிமாகத் திறந்துவிட்டு உருவாக்கப்பட்ட செயற்கை வெள்ளத்தின்போது சென்னைக்குள்ளேயே வாகனங்கள் வர முடியாத நிலை இருந்தது.
ஆனால், மிக்ஜாம் புயல் சென்னையைக் கடந்த சில மணிநேரங்களிலேயே செங்கல்பட்டு முதல் சென்னை வரையிலான ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து சீரானது. பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் சீரான நிலைதான்.
அதே நேரத்தில், சென்னைப் புறநகரின் ஏரிகள் சூழ்ந்த பகுதிகளிலும், கடல் மட்டத்துக்கு இணையான சென்னையின் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் வெள்ளமாகத் தேங்கியிருந்ததை அறிந்து, அங்குள்ள மக்களுக்கு உதவிடவும், அவர்களை மீட்கவும், அந்தப் பகுதியில் வெள்ளநீரை வடியச் செய்து, இயல்பு நிலை திரும்பிடவும் அரசு இயந்திரங்கள் முழுமையான அளவில் தங்கள் பணிகளை மேற்கொண்டன.
விமர்சனம் செய்வதற்கும் வீண்பழி சுமத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டினாலும், மக்களின் துயர் துடைக்க அவர்கள் முன்வரவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திராவிட முன்னேற்றக் கழகம் 2015 வெள்ள பாதிப்பிலும், கொரோனா பேரிடரில் ஒன்றிணைவோம் வா என்ற பெயரிலும் மக்களின் துயரைத் துடைத்தது. ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் தி.மு.க கழகத்தினர்தான் மிக்ஜாம் கனமழை வெள்ள பாதிப்பில் மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது, மக்களின் கோரிக்கைகள் உடனடியாக செவி மடுக்கப்படாதது போன்ற தகவல்களையும் கவனித்து, அங்கும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆவன செய்தது உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு.
ஆட்சியை வழங்கிய மக்களிடம் பொறுப்புடன் நடந்துகொள்ளும் தன்மை கொண்டது இந்த அரசு. டி.வியில் பார்த்துதான் விவரம் தெரிந்துகொண்டேன் என்றோ, பங்களா வீட்டின் வாசலில் உள்ள பெரிய இரும்புக் கதவு திறக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றோ முந்தைய ஆட்சியாளர்களின் நிலைமை இன்றில்லை.
மக்கள் பிரதிநிதிகளை மக்கள் அணுகமுடியும், கேள்வி கேட்க முடியும், நிவாரணம் பெற முடியும் என்ற ஜனநாயகப்பூர்வமான அரசு செயல்பட்டு வருகிறது.
மிக்ஜாம் புயலின் பாதிப்புகளைப் பார்வையிட வந்த ஒன்றிய குழுவினரும், அரசியல் மாச்சரியமின்றி திராவிட மாடல் அரசின் பணிகளைப் பாராட்டியிருப்பது நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழ் மட்டுமல்ல, அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்றால் மிகையல்ல.
திராவிட மாடல் அரசின் பணிகளை பிற மாநிலங்கள் கவனிக்கின்றன. திராவிட மாடல் அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கையான பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் முன்னிறுத்திய மாநில உரிமைகள் காக்கப்படவேண்டும்.
முந்தைய அடிமை ஆட்சியாளர்களால் பறிபோன மாநில உரிமைகளை மீட்டாக வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கும், பிற மாநில மக்களுக்கும் உரிமைகள் கிடைத்திட 2024 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்களமாக நிச்சயம் அமைந்திடும். அந்தக் களத்தை நோக்கி நம்மை ஆயத்தப்படுத்திட, சேலத்தில் தம்பி உதயநிதி தலைமையில் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் டிசம்பர் 24 அன்று நடைபெறுகிறது.
பேரிடரிலிருந்து மீண்ட மக்களின் மகிழ்வான மனநிலை தொடர்ந்திட கண்டு, நம்முடைய பொறுப்புகளை உணர்ந்து, சேலத்தில் சந்திப்போம்! களம் எதுவாயிலும் கலங்காது நிற்போம்! இளைஞரணி மாநாடு வெல்லட்டும்! அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாகட்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.