Chennai Flood Tamil News, nivar cyclone: நிவர் புயல் நெருங்கியதை தொடர்ந்து, சென்னையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. 25-ம் தேதி (புதன்கிழமை) மாலை நிலவரப்படி அரசும், அதிகாரிகளும் வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்புகளை இங்கு வரிசைப்படுத்துகிறோம்.
1. நிவர் புயலின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ள நிலையில், புயல் கரையை கடக்கும் வரை மக்கள் அனைவரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
2. செம்பரம்பாக்கம் ஏரியில் மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
ஆற்றோர மக்கள் அரசு நிவாரண முகாம்களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
3. தமிழ்நாடுஅரசு 26.11.2020 அன்று 16 மாவட்டங்களில் உள்ள
உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிறுவனங்கள், வாரியங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை அளித்திருக்கிறது.
இருப்பினும், அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம் போல் செயல்படும்.
சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளையும் (26.11.2020) பொது விடுமுறை தொடரும்.
4. சென்னை மெட்ரோ ரயில்கள் இரவு 7 மணிக்கு பிறகு இயங்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் பாதுகாப்பைக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
5. சென்னை விமான நிலையம் 25-ம் தேதி இரவு முழுக்க மூடப்படுகிறது. விமானங்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் அனுமதி இல்லை. 2015 வெள்ளத்தின்போதும் சுமார் ஒரு வாரம் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4. நாளை (26.11.2020) வியாழக்கிழமை வண்டி எண் 02606/02605 காரைக்குடி – சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் பகல் நேர சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02636/02635 மதுரை – சென்னை எழும்பூர்-மதுரை வைகை பகல் நேர சிறப்பு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் மேலும் பல ரயில்களை நேரம் மாற்றியும் ரத்து செய்தும் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
5. சென்னைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சாலைகள் மூடப்படுவதாகவும், மக்கள் போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் எனவும் சென்னை பெருநகர போலீஸ் ஆணையர் அறிவித்திருக்கிறார்.
6. புதுச்சேரியைச் சுற்றியுள்ள காரைக்கல் மற்றும் மாமல்லபுரம் இடையே 25 ஆம் தேதி நள்ளிரவு மற்றும் 26 ஆம் தேதி அதிகாலை நேரங்களில் மிக கடுமையான சூறாவளி புயலாக 120-130 கிமீ முதல் 145 கிமீ. வேகம் வரை காற்று வீசும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.
7. பேரிடர் நேரங்களில் ‘112’ அவசர கால உதவி எண்ணை மக்கள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிவர் புயல் , கனமழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்க உதவி எண் அறிவித்தது சென்னை காவல்துறை. பொதுமக்கள் 94981 81239 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
8. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
9. புயல் கரையை கடந்தாலும் மக்கள் உடனே வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. புயல் கரையை கடந்ததாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே மக்கள் வெளியே வர வேண்டும் என மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் கேட்டுக்கொண்டார்.
10. நிவர் புயலால் வெள்ள நிவாரண முகாம்களில் மக்களை தங்கவைக்கும்போது கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.