இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் ஒவ்வொரு தெருக்களிலும், அக்டோபர் 1-ம் தேதிக்குள் வெள்ள அபாய எச்சரிக்கை (flood warning system) அமைப்பு தயார் நிலையில் இருக்கும் என்று, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘சென்னை மாநகரப் பகுதியின் பல்வேறு பகுதிகளில் 141 இடங்களில் ஆட்டோமெட்டிக் வாட்டர் லெவல் ரெக்கார்ட் அமைக்கும் பணிகள், விரைவில் முடிவடையும். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்தப் பருவமழைக் காலத்தில் நாங்கள் தயாராக இருப்போம். இந்த வடகிழக்கு பருவமழையில் வெள்ளம் ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே நிவாரணப் பொருட்கள், டீவாட்டரிங் பம்புகள் மற்றும் நிவாரணக் குழுக்கள் வெள்ளம் பாதித்த தெருக்களை அடையும். மூன்று நாட்களுக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒவ்வொரு சாலைகளிலும் வெள்ளம் எவ்வளவு எதிர்பார்க்கப்படுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்’, என்று தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அதிகாரி ஒருவர் கூறினார்.
தவிர சென்னையில் 14 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள் (automatic weather stations) அமைக்கும் பணி நிறைவடையும். ஆரம்ப எச்சரிக்கை அமைப்பின் ஒரு பகுதியாக, நகரில் மொத்தம் 78 இடங்களில் மழை அளவீடுகள் கிடைக்கும்.
வெள்ள அபாய எச்சரிக்கை (flood warning system) இந்த பருவமழையை சிறப்பாக சமாளிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மற்ற மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வெள்ள அபாயம் பற்றிய நம்பகமான தகவல்களை சென்னை மாநகராட்சி பெறும்.
இந்த ஆண்டு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தனி கட்டுப்பாட்டு அறைகள், நகரத்தில் உள்ள பிற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நம்பகமான தகவல்களைப் பெறும். சென்னை மாநகராட்சிக்கு கூடுதலாக தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலும் வெள்ளத்தடுப்பு வசதி ஏற்படுத்தப்படும்.
இம்மாதம் பணிகள் முடிவடைந்தவுடன், செம்பரம்பாக்கம், பூண்டி, ரெட்ஹில்ஸ் மற்றும் சோழவரம் ஆகிய நீர்த்தேக்கங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து குறித்த தகவல்களை அதிகாரிகள் பெறுவார்கள்.
எழிலகத்தில் உள்ள பிரதான கட்டுப்பாட்டு அறை, சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், ஆவடி மற்றும் தாம்பரத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் நான்கு அண்டை மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளும் சிறந்த வெள்ள எச்சரிக்கைக்காக ஒருங்கிணைக்கப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“