தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட தாய்ப்பால் வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்த தாய்ப்பால் வங்கிகள் பொதுவாக மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருக்கும். இங்கு தனது குழந்தைக்கு கொடுத்தது போக இருக்கும் பாலை தாய்மார்கள் தானமாக வழங்குவார்கள்.
ஆனால், சமீப காலமாக தாய்ப்பால் வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ரகசியமாக ஆன்லைன் மூலம், தாய்ப்பாலை வணிகரீதியாக சில நிறுவனங்கள் தாய்ப்பாலை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், இந்திய அரசு, தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை என கூறியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் “ உணவுப் பாதுகாப்பு சட்டம் 2006இன் படி, தாய்ப்பாலை பதப்படுத்துவதும் விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே வணிகரீதியாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்,” இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மதாவரத்தில் முத்தையா என்பவர் புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து பாட்டில்களில் தாய்ப்பால் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் கடையில் சோதனை நடத்தினர்.
புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்ய மட்டுமே கடைக்கு உரிமம் தரப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 50 மில்லி லிட்டர் தாய்ப்பால் ரூ. 500-க்கு அவர் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கஸ்தூரி நடவடிக்கை எடுத்துள்ளார். தாய்ப்பால் நிரப்பப்பட்ட 50 பாட்டில்களை பறிமுதல் செய்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்ற முத்தையா என்பவரின் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“