அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை மாணவி பிரியாவின் உடல் மீது அவர்களுடைய குடும்பத்தினர் அவர் விளையாட்டு போட்டிகளில் பெற்ற கோப்பைகளையும் கேடயங்களையும் பெட்டி மீது அடுக்கி அழுத நிகழ்வு பார்ப்பவர்களை கலங்க வைத்தது.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மாணவி பிரியா (17). ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த இவர் ஒரு கால்பந்தாட்ட வீராங்கனை. இவருக்கு கடந்த 7-ம் தேதி மூட்டு வலி பிரச்சனை ஏற்பட்டதையடுத்து, கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிரியாவின் காலில் ரத்த ஓட்டம் இல்லை எனக் கூறி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய கால் மோசமானதால், பிரியாவின் வலது காலை அகற்றி உள்ளனர். இருப்பினும், பிரியா இன்று (நவம்பர் 15) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மூட்டுவலி இருப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு சென்ற மாணவி பிரியாவின் கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, உயிரிழந்ததற்கு தவறான சிகிச்சையே காரணம் என்று அவருடைய பெற்றோர், உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், “பிரியாவின் இறப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்.” என பிரியாவின் தந்தை ரவிக்குமார் வலியுறுத்தினார்.
இதையடுத்து, மாணவி பிரியாவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவர்கள் கவனக்குறைவுடன் செயல்பட்டது தெரியவந்தது. தவறு செய்த மருத்துவர்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்ச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தவறான சிகிச்சையால் மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம் சங்கர் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மாணவி பிரியாவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
இந்தநிலையில், உயிரிழந்த மாணவியின் உடல் வியாசார்பாடியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாணவி பிரியாவின் உடலைப் பார்த்து அவரது சகோதரர், பெற்றோர், மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பிரியாவின் கல்லூரித் தோழிகள் பிரியாவுக்கு பிடித்த கால்பந்தை கொண்டுவந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி அழுத காட்சி பார்பவர்களை கலங்க வைத்தது.
கால்பந்து வீராங்கனையான பிரியா விளையாட்டில் பெற்ற கோப்பைகளையும் கேடயங்களையும் அவரது குடும்பத்தினர், அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது வைத்த அழுத காட்சி காண்பவர்களின் இதயத்தை பிழிந்து கண்ணீர் வர வைப்பதாக இருந்தது.
மாணவி பிரியாவின் உடல் ஷெனாய் நகர் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய இறுதி ஊர்வலத்தின்போது, அவருடைய கால்பந்து காலணி வைத்து கொண்டு வரப்பட்டது. மாணவி பிரியாவின் இறுதிச் சடங்கில் உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"