சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் வாயுக்கசிவு ஏற்பட்டு 40 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு பிறகு பள்ளி இன்று திறக்கப்பட்டதையடுத்து மேலும் 3 மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.
கடந்த 25 ஆம் தேதி வாயு கசிவு ஏற்பட்டு 40 மாணவிகள் மயங்கி விழுந்த நிலையில் பள்ளியில் இருந்த அனைத்து குழந்தைகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.
பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் தங்களது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து சென்றதையடுத்து 10 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து இருந்தனர். மீண்டும் பள்ளியில் வாயுக்கசிவு ஏற்பட்டு 3 மாணவர்கள் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்து சென்றனர்.
மாணவர்களை அழைத்துச்செல்ல வந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பள்ளியானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் வாயுக்கசிவு குறித்த விசாரணை அறிக்கை வெளியான பிறகு பள்ளி திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் "எல்லாமே சரியா இருக்கு என்றுதான் சொன்னாங்க, ஆனா 3 பிள்ளைகள் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்ட போது சரியாக பதில் அளிக்கவில்லை" என்றும் பெற்றோர்களை அலைக்கழிப்பதாகவும் தெரிவித்தனர்.
போலீசாரும் பள்ளி நிர்வாகத்தினரும் முறையாக பதில் அளிக்கவில்லை என்றும் இதனால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் அதையும் மீறி கேள்வி கேட்டால் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு அலட்சியமாக பதில் அளிப்பதாக தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“