Congress Ex.MP Anbarasu : காசோலை மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசுவுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை திரும்பப் பெற்ற சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
காங்கிரஸ் முன்னாள் எம்பி அன்பரசு, ராஜிவ்காந்தி கல்வி அறக்கட்டளை செலவுக்காக, 2002ல் பைனான்சியர் முகுந்த் சந்த் போத் ராவிடம் 35 லட்சம் கடன் பெற்றிருந்தார்.
இந்த கடனை திருப்பி கொடுக்கும் வகையில் அன்பரசு அளித்த காசோலை, வங்கியில் பணமின்றி திரும்பி வந்ததால், அன்பரசு, அவரின் மனைவி கமலா அன்பரசு அறக்கட்டளை நிர்வாகி மணி உள்ளிட்டோருக்கு எதிராக முகுந்த் சந்த் போத்ரா காசோலை மோசடி வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், அன்பரசு உள்ளிட்டோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றமும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உறுதி செய்தது.
இதனிடையே அன்பரசுவின் மனைவி கமலா அன்பரசு மரணமடைந்தார். இந்நிலையில் அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அன்பரசு மற்றும் மணி ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியிருந்தது.
இந்நிலையில் மேல் முறையீட்டு மனு நீதிபதி வேல் முருகன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி, அன்பரசு உள்ளிட்ட இருவருக்கும் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை திரும்பப் பெற்ற நீதிபதி, தண்டனை காலத்தை அனுபவிக்கச் செய்யும் வகையில் இருவருக்கும் எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டர்.
மேலும் படிக்க : “மே 24 வரை சிறையில் தான் இருக்க வேண்டும்” – 3வது முறையாகவும் நீரவ் மோடியின் பெயில் மனு நிராகரிப்பு