ஹாசினி விவகாரத்தின் வடு இன்னும் மறையாத நிலையில் , சென்னையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயலில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த 10 வயதான சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். பார்ப்பதற்கு துறுதுறுவென சுற்றித் திரியும் அந்த சிறுமியிடம் குடியிருப்பில் இருந்த அனைவருமே அன்பாக பழகி வந்துள்ளனர்.
ஆனால் அதே குடியிருப்பில் வசித்து வந்த சுரேஷ் என்ற 29 வயதான இளைஞரின் பார்வையோ வேறு ரகமாக இருந்துள்ளது. சிறுமியிடம் அவ்வப்போது பேச்சுக் கொடுத்து வந்த அவரை அப்போது யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
சம்பவத்தன்று பெற்றோர் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த வேளையில் சிறுமி கழிவறை செல்வதற்காக வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். பொதுவான கழிவறை உள்ள குடியிருப்பு என்பதால் சிறுமி வந்ததை பார்த்த சுரேஷ், அவரை வாயைப் பொத்தி அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுமியை பாலியல் வன்முறை செய்த சுரேஷ், அவர் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்துள்ளார். யாருக்கும் தெரிந்துவிட்டால் ஆபத்து என கருதிய அவர், உடனே தலையணையை வைத்து முகத்தை அழுத்தியதோடு அவரை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி உள்ளார்.
இதனிடையே சிறுமியை காணாத பெற்றோர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததோடு சிறுமியையும் தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் சிறுமி ரத்தக்காயங்களோடு விழுந்து கிடந்துள்ளார். உடனே பதறிப்போன அவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் சுரேஷ் ஈடுபட்டதும் கொடூரமாக கொன்றதும் உறுதியானது. அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹாசினி விவகாரத்தின் வடு இன்னும் முழுவதும் மறையாத நிலையில், சென்னையில் மீண்டும் சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், தண்டனையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மேலும் வலுவாக்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil